தமிழ் திரை உலகில் குறிப்பிடப்படும் பாடலாசிரியர்களின் ஒருவரான பாடலாசிரியர் காமகோடியன் தமிழ் சினிமாவில் பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியுள்ளார். இதுவரை தமிழ் சினிமாவில் ஆயிரம் பாடல்களுக்கு மேல் இவர் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இசைஞானி இளையராஜாவின் இசையில் 80-களில் பூவிழி வாசலிலே போன்ற படங்களில் பாடல்களை எழுதியுள்ள காமகோடியன் விஜய் மற்றும் அஜித்குமார் இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே, விஜய்யின் சந்திரலேகா, அஜித்குமாரின் தொடரும் உள்ளிட்ட படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார்.

குறிப்பாக சூர்யாவின் மௌனம் பேசியதே திரைப்படத்தில் இடம்பெற்ற “என் அன்பே என் அன்பே” என்ற பாடலும் இவர் எழுதியது தான். சின்னமனூர் கலை மன்றத்தின் “கற்பனை சுடரொளி”, கண்ணதாசன் விஸ்வநாதன் அறக்கட்டளையின் “கவியரசர் கண்ணதாசன் விருது”, தமிழக அரசின் “கலை வித்தகர் விருது” மற்றும் “கலைமாமணி விருது” உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார் கவிஞர் காமகோடியான்.

இந்நிலையில் கவிஞர் காமகோடியன் நேற்று (ஜனவரி 5ஆம் தேதி) மாலை உயிரிழந்ததாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவந்துள்ளன.கவிஞர் காமகோடியான் மறைவுக்கு கலாட்டா குழுமம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. 76 வயதான கவிஞர் காமகோடியன் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். திரை பிரபலங்களும் தமிழ் சினிமா ரசிகர்களும் கவிஞர் காமகோடியனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.