தமிழ் திரை உலகின் குறிப்பிடப்படும் ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான ராஜீவ்மேனன் தமிழில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பம்பாய் திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். தொடர்ந்து இயக்குனர் மணிரத்னத்தின் குரு மற்றும் கடல் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மேலும் இயக்குனராகவும் மின்சாரக்கனவு , கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சர்வம் தாள மயம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் ஒளிப்பதிவாளர் இயக்குனர் ராஜீவ் மேனன் அவர்களின் தாயார் கல்யாணி மேனன் காலமானார்.

தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகியான கல்யாணி மேனன், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் காதலன் படத்தில் இடம்பெற்ற “இந்திரையோ இவள் சுந்தரியோ” , முத்து படத்தில் இடம்பெற்ற “குலுவாலிலே” , அலைபாயுதே படத்தில் இடம்பெற்ற “அலைபாயுதே” , விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இடம் பெற்ற “ஓமன பெண்ணே” உள்ளிட்ட பல பாடல்களை பாடியுள்ளார். கடைசியாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த 96 திரைப்படத்தில் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையில் வெளிவந்த “காதலே காதலே” பாடலலிலும் பாடியுள்ளார். 

80 வயதாகும் பாடகி கல்யாணி மேனன் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். ஒளிப்பதிவாளர் இயக்குனர் ராஜீவ் மேனன் அவர்களின் தாயார் கல்யாணி மேனன் மறைவுக்கு இந்திய திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். கல்யாணி மேனனின் இறுதிச் சடங்குகள் நாளை மதியம் 2 மணியளவில் பெசன்ட் நகரில் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.