ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்து தீபாவளி விருந்தாய் வெளியான படம் மூக்குத்தி அம்மன். இந்தப் படத்தில் நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க, மௌலி, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டோர் முக்கியப் பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். RJ பாலாஜியுடன் இணைந்து NJ சரவணனும் இந்த படத்தை இயக்கியுள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரிஷ் கோபால கிருஷ்ணன் இசையமைத்துள்ளார். செல்வா RK படத்தொகுப்பு மேற்கொள்கிறார். 

வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படம் நேரடியாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியானது. கொரோனா காரணமாக, இந்தியாவில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் ஓடிடி தளங்களுக்கிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியிட்டு, தனது இரண்டாவது படத்திலும் வெற்றி கண்டுள்ளார் RJ பாலாஜி. 

நிகழ்ச்சி தொகுப்பாளராக வரும் RJ பாலாஜி, மூக்குத்தி அம்மனை சந்தித்தவுடன் அவர் வாழ்வில் நடக்கும் மாற்றங்களே படத்தின் கதைக்கரு. காமெடி படமாக இருந்தாலும், நிகழ்கால சமூக பிரச்சனைகளை பேசும் படமாக இருந்தது என புகழாரம் சூட்டினர் திரை ரசிகர்கள். மதத்தை வைத்து நடக்கும் வியாபார விஷயங்கள் குறித்தும் இந்த படம் பேசியுள்ளது. 

மூக்குத்தி அம்மன் படத்தின் போஸ்டர் துவங்கி, ப்ரோமோஷன் பணிகள் வரை கச்சிதம் காண்பித்திருந்தனர் படக்குழுவினர். படத்தின் ஆடி குத்து மற்றும் பகவதி பாபா பாடல் வீடியோவை தொடர்ந்து சாமி குலசாமி பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. 

தேனிசை தென்றல் தேவா பாடிய இந்த பாடல் வரிகளை பா.விஜய் எழுதியுள்ளார். மிடில் கிளாஸ் இளைஞனின் வாழ்வை பிரதிபலிக்கும் விதத்தில் இந்த பாடல் காட்சிகள் அமைந்துள்ளது என கமெண்ட் செய்து வருகின்றனர் இணையவாசிகள். மூன்று தங்கைகளுடன் பிறந்த அண்ணன் பாத்திரத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் பாலாஜி என பாராட்டி வருகின்றனர் ரசிகர்கள். இந்த வருடன் நடிகை ஊர்வசிக்கு பல வெற்றி படங்களை தந்துள்ளது என ஊர்வசியை குறிப்பிட்டு கூறி மகிழ்கின்றனர் ரசிகர்கள்.