ரேடியோ தொகுப்பாளராக இருந்து பிறகு சில படங்களில் காமெடியனாக நடித்தவர் RJ பாலாஜி. கடந்த ஆண்டு வெளியான LKG படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இந்த திரைப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்திருந்தது.

தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கி, நடித்துள்ள படம் மூக்குத்தி அம்மன். இந்தப் படத்தில் நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க, மௌலி, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டோர் முக்கியப் பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். RJ பாலாஜியுடன் இணைந்து NJ சரவணனும் இந்த படத்தை இயக்கியுள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரிஷ் கோபால கிருஷ்ணன் இசையமைத்துள்ளார். செல்வா RK படத்தொகுப்பு மேற்கொள்கிறார். 

வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் முற்றிலுமாக முடிவடைந்து ரிலீசுக்குத் தயாராகிவந்த நிலையில், வரும் தீபாவளி அன்று இத்திரைப்படம் நேரடியாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. கொரோனா காரணமாக, இந்தியாவில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் ஓடிடி தளங்களுக்கிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதனால், அமேசான் ப்ரைம், நெட்ஃபிளிக்ஸ், டிஸ்னி+ ஹாஸ்டார், ஜீ5 ஆகிய தளங்கள் புதிய படங்களை வாங்கி நேரடியாக ரிலீஸ் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தற்போது படத்தின் ட்ரைலர் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. நிகழ்ச்சி தொகுப்பாளராக வரும் RJ பாலாஜி, மூக்குத்தி அம்மனை சந்தித்தவுடன் அவர் வாழ்வில் நடக்கும் மாற்றங்களே படத்தின் கதைக்கருவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காமெடி படமாக இருந்தாலும், நிகழ்கால சமூக பிரச்சனைகளை பேசும் படமாக இருக்கும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் திரை ரசிகர்கள். மதத்தை வைத்து நடக்கும் வியாபார விஷயங்கள் குறித்தும் இந்த படம் பேசியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவான நெற்றிக்கண் படத்திலும் நடித்துள்ளார் நயன்தாரா. சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார் நயன்தாரா. விஜய்சேதுபதி ஹீரோவாக நடிக்கவிருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கவுள்ளனர். காதலர் தினத்தன்று இதன் அறிவிப்பு வெளியானது. விரைவில் அதன் ஷூட்டிங் தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார். 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார் நயன்தாரா. சிவா இயக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதிஷ், குஷ்பு என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.