கடந்த 2013-ம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் த்ரிஷ்யம். மலையாளத்தில் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்ற இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்ட முதல் இந்தியப் படம் த்ரிஷ்யம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. வசூலிலும் இந்த படம் சாதனை படைத்தது.

ஜீத்து ஜோசப் இயக்கி இருந்த இந்த படம், தமிழில் கமல்ஹாசன், கவுதமி, ஆஷா சரத், நிவேதா தாமஸ் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இரண்டு பெண் குழந்தைகளின் தந்தையாக கமல்ஹாசன் நடித்து இருந்தார். இதையும் ஜீத்து ஜோசப்பே இயக்கி இருந்தார். ஜிப்ரான் இசை அமைத்திருந்த இந்த படம் தமிழிலும் சூப்பர் ஹிட்டானது.

இது தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பிலும் கன்னடத்தில் ரவிச்சந்திரன் நடிப்பிலும், இந்தியில் அஜய்தேவ்கன் நடிப்பிலும் ரீமேக் ஆகி வரவேற்பைப் பெற்றது. சிங்களத்திலும் ரீமேக் ஆன இந்தப் படம், சீனாவிலும் ரீமேக்காகி சாதனைப் படைத்தது. அங்கு, ஷீப் வித்தவுட் அ ஷெப்பர்ட் என்ற பெயரில் உருவாகி ஹிட்டானது.

தனது மூத்த மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் போலீஸ் அதிகாரி மகனை, மகளும், மனைவியும் கொல்கிறார்கள். அவன் உடலையும் கொலை செய்ததற்கான ஆதாரங்களையும் கமல்ஹாசன் மறைத்து, இருவரையும் போலீஸ் பிடியில் இருந்து காப்பாற்றுவது கதை. படம் ரிலீஸான நேரத்தில் இதன் அடுத்தப் பாகம் உருவாவது பற்றி கூறியிருந்தார் ஜீத்து ஜோசப்.

தற்போது இதன் அடுத்த பாகம் உருவாவது உறுதியாகி இருக்கிறது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா, எஸ்தர் அனில் உள்பட பலர் நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங் சமீபத்தில் கொச்சியில் துவங்கியது. படக்குழுவினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் மோகன் லால் படப்பிடிப்பில் இன்று இணைந்துள்ளார். படக்குழுவுடன் மோகன் லால் பகிர்ந்த போட்டோ இணையத்தை அசத்தி வருகிறது. 

இதன் பிறகு தொடுபுழாவில் ஷூட்டிங் நடக்க இருக்கிறது. இந்த படம் குடும்ப கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படுகிறது. இதில் கிரைமுக்கு முக்கியத்துவம் இருக்காது என்று படக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு தம்பி என்ற படத்தை இயக்கியிருந்தார் ஜீத்து ஜோசப். கார்த்தி மற்றும் ஜோதிகா நடித்த இந்த படத்தில் சத்யராஜ், சீதா, நிகிலா விமல் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தனர்.