தமிழ் சினிமா நடிகர்களில் பெரிதும் பிரபலமானவர் மிர்ச்சி சிவா. 12B படத்தில் துணை நடிகராக அறிமுகமான சிவா தற்போது அகில உலக சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார். துவக்கத்தில் FM சேனல் ஒன்றில் ஆர் ஜேவாக பணியாற்றி வந்தவர், வெங்கட் பிரபு இயக்கத்தில் 2007-ம் ஆண்டு வெளியான சென்னை 28 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். அதைத்தொடர்ந்து தமிழ் படம், கலகலப்பு, தில்லு முல்லு, யா யா, வணக்கம் சென்னை என பட்டையை கிளப்பினார். 

மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சுமோ. பிப்ரவரி 14, ஆயிரம் விளக்கு உள்ளிட்ட படங்களை இயக்கிய ஹோசிமின் இப்படத்தை இயக்குகிறார். ப்ரியா ஆனந்த் நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சுமோக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

யோகி பாபு, வி.டி.வி கணேஷ் ஆகியோருடன் சுமோ வீரர் Yoshinori Tashiro-ம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் முக்கிய காட்சிகளை ஜப்பானில் படமாக்கியுள்ளது படக்குழு. ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். பிரவீன் கே.எல் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார்.

சுமோ விளையாட்டு சீனா மற்றும் ஜப்பானில் மிகவும் பிரபலம் என்பதால், இந்தப் படத்தை சீனா மற்றும் ஜப்பானில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த படத்தின் ரிலீஸுக்காக ஆவலில் உள்ளனர் திரை ரசிகர்கள். 

இந்நிலையில் இயக்குனர் ராம்பாலா இயக்கவிருக்கும் புதிய ஹாரர் காமெடி படத்தில் நடிக்கவுள்ளார் சிவா. லொள்ளு சபா புகழ் இயக்குனரான ராம்பாலா கடைசியாக தில்லுக்கு துட்டு 2 படத்தை இயக்கியிருந்தார். இவரும் மிர்ச்சி சிவாவும் இணைந்தால் நிச்சயம் திரையரங்கம் மகிழ்ச்சி மழையில் நனையும் என்று கூறினால் மிகையாகாது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது வேண்டுமானாலும் துவங்கும் என்றும், நம்மை வயிறு குலுங்க சிரிக்கவைக்கும் லொள்ளு சபா குழுவினரான மனோகர், சுவாமிநாதன் ஆகியோர் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபேமிலி அடியன்ஸ் ரசிக்கும் படி இப்படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.