ஆகச்சிறந்த நடிகராக தொடர்ந்து பல விதமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து நடிப்பின் அசுரனாக மக்கள் மனதை வென்ற நடிகர் தனுஷ் அடுத்ததாக தேசிய விருது பெற்ற பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் புதிய படத்தில் தனுஷ் நடிக்கிறார். தமிழ் , தெலுங்கு & ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் பூஜையோடு தொடங்கப்பட்டது. இதனிடையே தனது திரைப்பயணத்தில் அடுத்த மைல் கல்லாக தனுஷ் தனது 50வது படத்தில் நடிக்க இருக்கிறார். தனுஷின் இந்த 50 திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ராக்கி மற்றும் சாணிக் காயிதம் திரைப்படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார். 1930-களில் நடைபெறும் கதைக்களத்தை கொண்ட கேப்டன் மில்லர் திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷுடன் இணைந்து பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க, சந்தீப் கிஷன் முன்னணி வேடத்தில் நடிக்கிறார். மேலும் கன்னட நடிகர் சிவராஜ்குமார், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கென், இளங்கோ குமரவேல், பிரபல ஹாலிவுட் நடிகர் எட்வர்ட் சொன்னேன்பிலிக் ஆகியோர் கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் நாகூரான் படத்தொகுப்பு செய்யும் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் கடந்த 3 மாதங்களாக முழு வீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் நேற்று நடைபெற்ற படப்பிடிப்பின் போது குண்டு வெடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்போது திடீரென வெடிகுண்டுகள் வெடித்த சத்ததால் அருகில் சுற்று வட்டாரத்தில் இருந்த மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் உரிய அனுமதி பெறாமல் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு அந்த பகுதியில் நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் துரை ரவீந்திரன் அவர்கள் அனுமதி வழங்கிய பிறகு மீண்டும் படப்பிடிப்பு அதே இடத்தில் நடத்தப்பட்டதாக தெரிகிறது. இதனால் அந்த பகுதியில் தற்போது பரபரப்பான ஒரு சூழ்நிலை நிலவுகிறது.
இது குறித்து தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிப்பிற்குரிய மதிவேந்தன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். அப்படி பேசுகையில், "வனப்பகுதிகளில் ஷூட்டிங் நடத்த வேண்டும் என்றால் எப்போதும் அனுமதி கோரி விண்ணப்பிப்பார்கள். நாங்கள் உரியத் தகவல்களைக் கேட்டு பரிசீலனை செய்தே விண்ணப்பத்திற்கு அனுமதி அளிப்போம். எந்த தேதிகளில் எடுக்க வேண்டும்.. எந்த நேரத்தில் எடுக்க வேண்டும் என்பதை எல்லாம் விளக்கிக் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் ஷூட்டிங் செய்ய அனுமதி அளிப்பார்கள். ஆனால், இப்போது அனுமதி இல்லாமல் ஷூட்டிங் நடப்பதாகப் புகார் எழுந்துள்ளது. இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். மேலும், அனுமதி இல்லாமல் வெடிகுண்டு வைப்பதாகவும் புகார்கள் வந்துள்ளது. இது குறித்தும் உரிய விசாரணை நடத்தப்படும். வனப்பகுதிகளில் அனுமதி இல்லாமல் ஷூட்டிங் நடத்தத் தமிழக அரசோ வனத்துறையோ நிச்சயம் உறுதுணையாக இருக்காது. இது மட்டுமின்றி அனுமதி அளிக்கப்பட்ட போது நாங்கள் கொடுத்த அனைத்து நிபந்தனைகளையும் பின்பற்றியுள்ளனரா என்பது குறித்தும் விசாரிக்க உள்ளோம்" என தெரிவித்துள்ளார். எனவே வெகு விரைவில் இது குறித்த இதர தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.