தெலுங்கு திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகி தற்போது பல மொழி ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாக திகழ்பவர் விஜய் தேவரகொண்டா. குறிப்பாக அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் இந்திய திரை உலகின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்த்த விஜய்தேவரகொண்டா தொடர்ந்து டியர் காம்ரேட் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என அடுத்தடுத்த படங்களால் மக்களின் மனம் கவர்ந்த ஹீரோவாக உயர்ந்துள்ளார்.

முன்னதாக தெலுங்கு திரை உலகின் நட்சத்திர இயக்குனரான பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் லைகர் படத்தில் நடித்துள்ள விஜய் தேவரகொண்டா அடுத்ததாக மீண்டும் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக தயாராக உள்ள JGM ஜனகணமன திரைப்படத்திலும் நடிக்கிறார் என சில தினங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

குத்து சண்டை வீரராக விஜய் தேவரகொண்டா நடித்துள்ள லைகர் படத்தில், கதாநாயகியாக பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே நடிக்க , ரம்யா கிருஷ்ணன், ரோனிட் ராய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, லைகர் திரைப்படத்தின் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை சாம்பியனான மைக் டைசன் நடிக்கிறார்.

தெலுங்கு மற்றும் ஹிந்தி என இரு மொழிகளில் தயாராகி, இந்த ஆண்டு (2022) ஆகஸ்ட் 25 ஆம் தேதி இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ரிலீசாகவுள்ள லைகர் திரைப்படத்தை நடிகை சார்மி மற்றும் பூரி ஜெகநாத் அவர்களின் பூரி கனெக்ட்ஸ் மற்றும் தர்மா புரோடக்சன்ஸ் இணைந்து தயாரிக்க,யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் வழங்குகிறது. 

விஷ்ணு சர்மா ஒளிப்பதிவில்  லைகர் திரைப்படத்தின் பாடல்களுக்கு தனிஷ்க் பக்ச்சி இசையமைக்க பிரபல இசையமைப்பாளர் மணிஷர்மா பின்னணி இசை சேர்க்கிறார்.  லைகர் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மைக் டைசன் தனது டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.