புரட்சித் தலைவர், மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் நடித்த பல திரைப்படங்களுக்கு வசனகர்த்தாவாக பணியாற்றிய எழுத்தாளர் கே.சொர்ணம் அவர்கள் நேற்று காலமானார். தமிழில் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் நடித்த நம் நாடு, அடிமைப் பெண் உள்ளிட்ட பல படங்களுக்கு எழுச்சிமிக்க வசனங்களை எழுதிய வசனகர்த்தாவாக பணியாற்றியுள்ளார் திரு கே.சொர்ணம் அவர்கள்.

மேலும் முத்தமிழறிஞர் .கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் கதை எழுதி நவரச நாயகன் கார்த்திக் கதாநாயகனாக நடித்த “ஒரே ரத்தம்” திரைப்படத்தை இவர் இயக்கியுள்ளார். ஒரே ரத்தம் திரைப்படத்தில் தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நடிகராக அறிமுகமாகி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் முரசொலி பத்திரிக்கையிலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நடத்திய இளைய சூரியன் பத்திரிக்கையிலும் முக்கிய பொறுப்பு வகித்த திரு.சொர்ணம் அவர்கள் நேற்று உடல் நிலை குறைவு காரணமாக உயிரிழந்தார். திரு.சொர்ணம் அவர்களுக்கு வயது 88. திரு கே.சொர்ணம் அவர்களின் மறைவுக்கு தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களும் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். 

இதுகுறித்து பிறகு டுவிட்டரில் பகிர்ந்த திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள்,”முத்தமிழறிஞருடன் முரசொலியிலும், கழக தலைவர் அவர்கள் நடத்திய இளையசூரியன் ஏட்டிலும் முக்கிய பொறுப்புகளை வகித்தவர்; திரைப்பட இயக்குனர் - வசன கர்த்தா - அரசியல் என இயங்கிய சொர்ணம் மாமா அவர்களின் மறைவையடுத்து அவரது உடலுக்கு இன்று மரியாதை செய்தோம். குடும்பத்தாருக்கு ஆறுதல்-ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்துள்ளார் .திரு கே.சொர்ணம் அவர்களின் மறைவுக்கு தமிழகத்தைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.