தமிழ் சினிமாவின் ஃபேவரட் இசையமைப்பாளராக பல ஹிட் பாடல்கள் கொடுத்த விஜய் ஆண்டனி தற்போது நடிகர், தயாரிப்பாளர், படத்தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வருகிறார். முன்னதாக  இயக்குனர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் தமிழரசன், இயக்குனர் A.செந்தில்குமார் இயக்கத்தில் காக்கி மற்றும் இயக்குனர் நவீன் இயக்கத்தில் அக்னி சிறகுகள் ஆகிய திரைப்படங்கள் விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன. 

மேலும் முதல்முறை இயக்குனராக களமிறங்கும் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படத்தை தயாரித்து இயக்கி நடிக்கிறார். அடுத்து விஜய் ஆன்டனியின் நடிப்பில், கொலை என்னும் க்ரைம் த்ரில்லர் படமும் தமிழ்படம் பட இயக்குனர் C.S.அமுதன் இயக்கத்தில் புதிய படமும் தயாராகி வருகிறது. இதனிடையே முன்னணி ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய்மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்திலும் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார் .

விஜய் ஆண்டனி நடிப்பில் சூப்பர் ஹிட்டான சலீம் திரைப்படத்தின் 2-ம் பாகமாக இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், ரமணா, தலைவாசல் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க விஜய் மில்டன் ஒளிப்பதிவில், விஜய் ஆண்டனி இசையமைக்கிறார்.

மழை பிடிக்காத மனிதன் (சலீம் 2) படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தில் கதாநாயகியாக இளம் நடிகை மேகா ஆகாஷ் இணைந்துள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொடர்ந்து மழை பிடிக்காத மனிதன் படத்தின் அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.