கடந்த 2005-ம் ஆண்டு வெளியான அன்பே ஆருயிரே திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மீரா சோப்ரா. அதைத்தொடர்ந்து லீ, மருதமலை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். ரசிகர்களால் நிலா என அன்போடு அழைக்கப்பட்டார். கடைசியாக கில்லாடி எனும் படத்தில் நடித்திருந்தார். இந்த லாக்டவுனில் நடிகர் ஜூனியர் NTR-ன் ரசிகர்களோடு ட்விட்டர் போரில் ஈடுபட்டு ட்ரெண்டானர் மீரா. 

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள், இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த தொற்று காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே செல்கிறது. இதைக் கட்டுப்படுத்த அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருந்தும் குறைந்த பாடில்லை. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8.50 லட்சமாக அதிகரித்து இருக்கிறது. 

இந்த கொரோனா தொற்று பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை. நடிகர் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், நடிகைகள் நவ்நீத் கவுர், ஜெனிலியா, நடிகர் விஷால், இயக்குனர் ராஜமவுலி உள்பட பலருக்கும் கொரோனா தொற்று பாதித்தது. பிறகு அவர்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டு இந்த தொற்றில் இருந்து மீண்டனர்.

இந்நிலையில், நடிகை மீரா சோப்ராவின் நண்பரின் பெற்றோரை இந்த உயிர் கொல்லி கொரோனா கொன்றுவிட்டதாக பதிவு செய்துள்ளார். அவர் தனது ட்விட்டரில், என் நண்பர் ஒருவர் கோவிட்-19 காரணமாக தனது பெற்றோரை சில நாட்களுக்கு முன் இழந்துவிட்டார். முதலில் தாயை இழந்தார். நேற்று (நேற்று முன்தினம்) தந்தையை இழந்துள்ளார். 

இது அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. கோவிட்-19 மனிதர்களை கொன்று கொண்டிருக்கும் நிலையில் தளர்வுகள் செய்யப்படுகின்றன. அது பாதுகாப்பானது அல்ல. மிகவும் அவசியம் இருந்தால் மட்டுமே மக்களை சந்தியுங்கள். தயவு செய்து மாஸ்க் அணியுங்கள் என்று ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ள இவர், பிறகு தனது ஒரிஜினல் பெயரான மீரா சோப்ரா என்ற பெயரில் நடிக்கத் தொடங்கினார். இந்தியிலும் நடித்து வந்த இவர், சிறிது காலம் அதிக படங்களில் நடிக்காமல் இருந்தார். இப்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் செக்‌ஷன் 375 என்ற இந்தி படம் வெளியாகி இருந்தது.