தமிழ் திரையுலகின் சிறந்த நடிகையாகவும், 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் ஹீரோயினாகவும் திகழ்ந்தவர் நடிகை மீனா. ரஜினி, கமல், அஜித், விஜய் என உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். முத்து, எஜமான், அவ்வை ஷண்முகி, வில்லன், ரிதம், சிட்டிசன் போன்ற வெற்றி படங்களில் நடித்து அசத்தியுள்ளார். தற்போது இவரது மகள் நைனிகா நடித்து வருகிறார். தளபதி விஜய்யுடன் தெறி படத்தில் இணைந்து நடித்தார். 

இந்நிலையில் மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். நெஞ்சங்கள் என்ற படத்தில் அறிமுகமாகியிருந்தாலும், திரைக்கு முதலில் வந்தது எங்கேயோ கேட்ட குரல் திரைப்படம் தான். 1982-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் ரஜினிகாந்த்துடன் முதன் முதலாக நடித்தது குறித்தும் பதிவு செய்துள்ளார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அம்பிகா மற்றும் ராதா நடித்த இந்த படத்தை எஸ்.பி.முத்து ராமன் இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு பிறகு தான் அன்புள்ள ரஜினிகாந்த் படம் வெளியானது. அதில் மீனாவின் நடிப்பு பல பாராட்டுகளை பெற்றது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அதன் பின் ரஜினிகாந்துக்கு ஜோடியாகவே எஜமான், முத்து, வீரா போன்ற படங்களில் நடித்து அசத்தினார் மீனா. 

சமீபத்தில் மீனா நடிப்பில் கரோலின் காமாட்சி எனும் வெப்சீரிஸ் வெளியானது. விவேக் குமார் கண்ணன் இயக்கத்தில் வெளியான இந்த இணைய தொடரில் சிபிஐ அதிகாரியாக நடித்திருந்தார் மீனா. 

இதைத்தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகும் அண்ணாத்த படத்திலும் நடிக்கிறார் மீனா. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதில் கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ், சதீஷ், குஷ்பு மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதெராபாத் போன்ற பகுதிகளில் நடந்து முடிந்தது. 

லாக்டவுன் பிரச்சனையால் அண்ணாத்த படத்தின் ரிலீஸை தள்ளிப் போட்டார்கள். 2021ம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக அண்ணாத்த ரிலீஸாகும் என்று கூறப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனை தற்போதைக்கு முடிவதாக தெரியவில்லை. இதனால் திட்டமிட்டபடி நவம்பர் மாதத்திற்குள் படப்பிடிப்பை நடத்தி முடித்து பொங்கலுக்கு ரிலீஸ் செய்வது என்பது கடினமாகிவிட்டது. இந்த காரணத்தால் அண்ணாத்த படத்தை பொங்கலுக்கு பதிலாக அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் ரிலீஸ் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.