கே.எஸ்.ரவிக்குமாரின் மதில் ட்ரைலர் வெளியீடு !
By Sakthi Priyan | Galatta | April 06, 2021 14:09 PM IST
கடந்த ஆண்டு கொரோனா வைரஸால் திரையரங்குகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ் சினிமா தயாரிப்பாளர்களின் பார்வை ஓடிடி தளங்கள் மீது திரும்பியது. இதில் முன்னணி நடிகரான சூர்யா நடித்திருந்த சூரரைப்போற்று திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி மற்றவர்களுக்கும் நம்பிக்கை தந்தது.
பின்னர் ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு திரையரங்குகள் திறக்கப்பட்டன. அதனால் பொங்கலுக்கு தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியானது. இருப்பினும் அடுத்த 16 நாட்களில் ஓடிடி-யிலும் வெளியானது.
அந்த வகையில் பிரபல ஓடிடி தளமான ஜீ5-ல் கடந்தாண்டு லாக்கப், கபெ.ரணசிங்கம், முகிலன், ஒரு பக்க கதை ஆகிய படங்கள் வெளியானது. தற்போது மதில் என்னும் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் இயக்குனரும், நடிகருமான கே.எஸ்.ரவிகுமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள இந்த படத்தை எஸ்.எஸ்.குரூப்பின் உரிமையாளர் சிங்கா சங்கரன் தயாரித்துள்ளார். கே.எஸ்.ரவிக்குமாருடன் இணைந்து படத்தில் மைம் கோபி, பிக்பாஸ் மதுமிதா, காத்தாடி ராமமூர்த்தி, லொள்ளு சபா சாமிநாதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மதில் திரைப்படம் தமிழ் நாட்டில் அடிக்கடி நிகழும் முக்கிய பிரச்சனை பற்றி பேசுகிறது. கடினமாக உழைத்து, சேமித்து அதன் மூலம் சொந்த வீடு கட்ட முயற்சிக்கும் அனைவரின் கதை தான் இது. பல சூழ்நிலைகளில் நமக்கு மேல் இருப்பவர்களின் அதிகாரத்தை கண்டு, அஞ்சி நாம் அமைதியாக இருந்து விடுகிறோம். இவற்றுக்கு எதிரான நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்துவதன் அவசியம் மதில் படத்தில் விளக்கப்பட்டுள்ளது என்று இயக்குனர் மித்ரன் ஜவஹர் கூறியிருக்கிறார்.
இந்நிலையில் மதில் படத்தின் ட்ரைலர் காட்சி தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. கே.எஸ். ரவிக்குமாரின் பாத்திரம் மிகவும் துணிச்சலாக, வசனங்கள் கூர்மையாகவும் உள்ளது. ஏப்ரல் 14 அன்று மதில் திரைப்படம் ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளது.
மலையாளத்தில் ஹிட்டான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25 படத்தின் தமிழ் ரீமேக்கை கே.எஸ்.ரவிக்குமார் தயாரிக்கிறார். கூகுள் குட்டப்பன் அவரின் உதவி இயக்குநர்கள் சபரி மற்றும் சரவணன் இயக்குகின்றனர். தயாரிப்பதோடு தர்ஷனுக்கு அப்பாவாக ரவிக்குமார் நடிக்கிறார். இவர்களுடன் லாஸ்லியாவும் நடிக்கிறார். துணை கதாபாத்திரத்தில் நடிகர் யோகி பாபுவும், வில்லனாக ப்ராங்ஸ்டர் ராகுலும் நடிக்கின்றனர்.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்திலும் முக்கிய ரோலில் நடித்துள்ளார் கே.எஸ். ரவிக்குமார்.