இசைப்புயல் AR ரஹ்மான் இசையமைத்து நடித்த வந்தே மாதரம் ஆல்பம் மூலம் புகழ் பெற்றவர் இயக்குனர் பரத் பாலா. என்னற்ற விளம்பர படங்களை இயக்கியவர், மரியான் படத்தின் மூலம் தமிழில் திரைப்பட இயக்குனராக அவதாரம் எடுத்தார். தனுஷ் மற்றும் பார்வதி மேனன் நடித்த இந்த படம் 2013-ம் ஆண்டு வெளியானது. ரஹ்மான் இந்த படத்திற்கு இசையைத்திருந்தார். மேக்கிங்கில் அதிகம் பேசப்பட்ட இந்த படம், இன்று வரை தனுஷ் ரசிகர்களின் ஃபேவரைட்டாக உள்ளது. 

ஓய்வில்லாமல் உழைக்கும் பரத் பாலா, இந்த லாக்டவுனிலும் அற்புதமான வீடியோ ஒன்றை வெளியிட்டு அசத்தினார். இந்திய அளவில் கொரோனா அச்சுறுத்தலால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிப் போயிருந்தனர். இதை வரும் தலை முறைகளுக்கு எடுத்துச் சொல்லும் விதத்தில் மீண்டும் எழுவோம் என்ற குறும்படத்தை ஆவணப்படுத்தியிருந்தார். 

இந்நிலையில் காமராஜர் பிறந்தநாளான இன்று, அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பரத் பாலா. சிறு வயது புகைப்படத்தை பகிர்ந்த பரத் பாலா, காமராஜர் பற்றியும் அவரது குடும்பத்தார் அவர் மீது வைத்திருந்த அன்பு குறித்தும் பதிவு செய்துள்ளார். பரத் பாலாவின் இந்த பதிவின் கீழ் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் அவரது அடுத்த படம் குறித்த அப்டேட்கள் ஏதாவது கிடைக்குமா என்று தேடி வருகின்றனர் நெட்டிசன்கள். 

தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், பெருந்தலைவர் காமராஜர். தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சிசெய்த இவருடைய காலம், தமிழக அரசியல் வரலாற்றில் பொற்காலமாக கருதப்படுகிறது. பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தியவர் ஆவார். இன்று இவரது பிறந்தநாளில் பல திரைப்பிரபலங்களும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.