மர்வெல் ஸ்டுடியோஸ் என்றாலே ரசிகர்களுக்கு நினைவுக்கு வருவது பல வித்தியாசமான சூப்பர் பவர் கொண்ட சூப்பர் ஹீரோக்கள் தான். இந்தியாவிலும் இந்த சூப்பர் ஹீரோக்களை ரசிக்காத ரசிகர்களே கிடையாது என சொல்லலாம் .

அயன் மேன்,  கேப்டன் அமெரிக்கா ,தோர், ஹல்க் ஸ்பைடர்மேன் ,பிளாக் பேன்தர், பிளாக் விடோ என பலவிதமான சூப்பர் ஹீரோஸ்  உலகம் முழுக்க இருக்கும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளனர். இந்த ஒவ்வொரு சூப்பர் ஹீரோக்களுக்கும் தனித்தனியாக மிகப்பெரிய ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றன. ஆனால் அத்தனை ரசிகர்களும் ரசிக்கும் ஒரு சூப்பர் ஹீரோ என்றால் அது நம் லோகி தான் .

வில்லத்தனமான சில்மிஷங்களும் சேட்டைகளும் செய்யும் ஒரு சூப்பர் ஹீரோவாக வலம் வரும் லோகி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் டாம் ஹிடில்ஸ்டன் நடித்திருந்தார். வில்லத்தனம் கலந்து இருந்தாலும் இந்தக் கதாபாத்திரத்தின் மீது ரசிகர்களுக்கு அலாதி பிரியம் எப்பொழுதும் உண்டு. அதனை உணர்த்தும் விதமாக தற்போது வெளியாக உள்ளது லோகி வெப்சீரிஸ். 

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் நேரடியாக வெளியாகும் இந்த வெப்சீரிஸை இயக்குனர் கேட் ஹெரான் இயக்கியுள்ளார். முன்னதாக இந்த வெப்சீரிஸின் முன்னோட்டமாக டீஸர், டிரெய்லர் என ஒவ்வொன்றும் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்ற நிலையில் இன்று இந்த வெப்சீரிஸ் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. இந்தியாவிலும் இன்று வெளியாகும் இந்த வெப்சீரிஸை பலரும் எதிர்பார்த்து வரும் இந்த சூழலில் லோகியாக நடித்த நடிகர் டாம் ஹிடில்ஸ்டன் வெளியிட்ட ஒரு வீடியோ தற்போது ட்ரெண்டாகி வருகிறது. 

ரசிகர்களோடு வார்த்தை விளையாட்டில் கலந்து கொண்ட  டாம் ஹிடில்ஸ்டன் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் அது சார்ந்த பதிலை தெரிவித்து வந்தார். அந்த வகையில் இந்தியா எனக்கேட்டதும்  ஷாருக்கான் என பதிலளித்த டாம் ஹிடில்ஸ்டன் தொடர்ந்து இந்தியன் சிட்டி என்றதும் சென்னை என பதிலளித்து அவரது சகோதரி சிறிது காலம் சென்னையில் வசித்ததையும் அந்த காலகட்டத்தில் இவரும் சில நாட்கள் சென்னையில் வாழ்ந்ததையும் குறிப்பிட்டு பேசியுள்ளார். அதில் "அக்கா" என அவர் தமிழில் பேசிய அந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. 

அவெஞ்சர்ஸ் எண்டு கேம் திரைப்படத்திற்கு பிறகு மார்வெல் ஸ்டுடியோஸ் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். இனி எப்போது தங்களது சூப்பர் ஹீரோக்களை பார்க்கப் போகிறோமோ என வருத்தத்தோடு இருந்தவர்களை குஷிப்படுத்தும் விதமாக தற்போது லோகி வந்திருக்கிறார் , வாருங்கள் ரசிப்போம்.