தமிழ் திரையுலகில் சினிமா சார்ந்த அனைத்து விஷயங்களையும் அறிந்தவர் மனோபாலா. இவரை இக்காலத்து டிஜிட்டல் ஜெனரேஷன் ரசிகர்களுக்கு நகைச்சுவை நடிகராக தான் தெரியும். ஆனால் சினிமாவின் நாடியறிந்தவர்களில் இவரும் ஒருவர். பாரதிராஜா இயக்கத்தில் 1979ம் ஆண்டு வெளியான புதிய வார்ப்புகள் என்ற படத்தின் மூலம் நடிகராக  களமிறங்கினார். 

அதே படத்தின் மூலமாக தான் பாரதிராஜாவின் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு தொடர்ச்சியாக பல படங்களில் நடித்தும் பாரதிராஜா அவர்களின் உதவி இயக்குனராகவும் பணியாற்றி வந்த மனோபாலா, 1982-ம் ஆண்டு கார்த்திக் நடிப்பில் வெளியான ஆகாய கங்கை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். 

நவரச நாயகன் கார்த்திக், கேப்டன் விஜயகாந்த் மற்றும் மோகன் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து இவர் படம் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 1987-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஊர் காவலன் என்ற வெற்றி படத்தை இயக்கியதும் மனோபாலா தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை எண்ணற்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து அசத்தி வருகின்றார். 

2014ம் ஆண்டு வெளியான வெற்றித்திரைப்படமான சதுரங்க வேட்டை படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்தார். இப்படத்திற்காக சிறந்த அறிமுக தயாரிப்பாளர் என்ற விருதையும் பெற்றார். இந்த லாக்டவுன் காலத்திலும் தனது youtube சேனல் மூலம் பேட்டிக்கண்டு வருகிறார் மனோபாலா. 

தற்போது ஹீரோக்கள் போல் மஞ்சள் நிற ஓவர் கோட்டுடன் வெள்ளை நிற உடையில் படு ஸ்டைலாக போட்டோஷூட் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த போட்டோஷூட்டில் இளம் நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு வளைச்சு வளைச்சு பலவிதமாக போஸ் தந்துள்ளார். இதுகுறித்து அவரது பதிவில், நாங்களும் டஃப் கொடுப்போம்ல என்றும், இது எப்படி இருக்கு ? என்றும் குறிப்பிட்டுள்ளார். 

பல திரைப்படங்களில் காஸ்ட்யூம் டிசைனராக பணி புரிந்த என்.ஜே. சத்யா ஸ்டைல் செய்துள்ளார். பிரஷுன் பிரஷாந்த் புகைப்படங்களை எடுத்துத்துள்ளார். Vurve சலூன் மேக்கப் பணியை செய்துள்ளனர். மனோபாலாவின் இந்த புகைப்படங்கள் திரை விரும்பிகளை ஈர்த்து வருகிறது.