மலையாள திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை மஞ்சுவாரியர் தமிழில் கடைசியாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்த அசுரன் திரைப்படத்தில் கதாநாயகியாக சிறப்பாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

தொடர்ந்து மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் மரக்கார் அரபிக்கடலிண்டே சிம்மம் மற்றும் ஜாக் அண்ட் ஜில் ஆகிய திரைப்படங்கள் விரைவில் திரைக்கு வர தயாராகி வருகின்றன். இந்நிலையில் தற்போது மஞ்சுவாரியார் கதாநாயகியாக நடிக்கும் அடுத்த புதிய படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது.

ஃபெஃப்கா  ரைட்டர்ஸ் யூனியன் மற்றும் தியேட்டர் ஆஃப் ட்ரீம்ஸ் சார்பில் டால்வின் குரியாக்கோஸ், ஜினு.வி.ஆபிரகாம் மற்றும் டிலீஷ் நாயர் இணைந்து தயாரிக்கும் புதிய படத்திற்கு காப்பா என பெயரிடப்பட்டுள்ளது. நடிகை மஞ்சுவாரியர் உடன்  நடிகர் பிரித்திவிராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆசிப் அலி மற்றும் அன்னா பென் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். காப்பா படத்திற்கு ஜஸ்டின் வர்கீஸ் இசையமைக்க சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்கிறார். 

பிரபல எழுத்தாளர் ஜி.ஆர்.இந்து கோபன் கதை, திரைக்கதை , வசனத்தில் இயக்குனர் வேணு இயக்கும் காப்பா படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. திருவனந்தபுரத்தை சுற்றி நடைபெறும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுத்தாளர்  ஜி.ஆர்.இந்து கோபன் எழுதிய பிரபலமான நாவலை தழுவி உருவாகும் காப்பா படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.