தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு திரைப்படமாக விளங்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தற்போது இயக்குனர் மணிரத்தினம் நிஜமாகி வருகிறார். எழுத்தாளர் கல்கியின் அற்புதப் படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி தயாராகும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகத்தை அறிவிக்கும் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் தயாராகும் திரைப்படமாக பொன்னியின் செல்வன் தயாராகிவருகிறது. இத்திரைப்படத்தில் சீயான் விக்ரம்,விக்ரம்,ஐஸ்வர்யா ராய்,கார்த்தி,ஜெயம் ரவி,திரிஷா,விக்ரம்பிரபு, ஜெயராம்,பிரபு,ஐஸ்வர்யா லெக்ஷ்மி,சரத்குமார்,பார்த்திபன்,பிரகாஷ்ராஜ், ரகுமான்,கிஷோர்,லால்,பாலாஜி சக்திவேல்,சாரா அர்ஜுன், ரியாஸ்கான் உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளது 

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒளிப்பதிவில் தயாராகிறது பொன்னியின் செல்வன். ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாடல்கள் குறித்த முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது .

இரண்டு பாகங்களாக உருவாகிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மொத்தம் 12 பாடல்களில் இடம்பெற்றுள்ளன. இதில் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் எட்டு பாடல்களை எழுதியுள்ளார். பிரபல கவிஞர் கபிலன் இரண்டு பாடல்களையும் பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து ஒரு பாடலையும் பாடலாசிரியர் வெண்பா கீதையன் ஒரு பாடலையும் எழுதியுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் பாடல்கள் குறித்த அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.