புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் சிறந்த படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி மிகப் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது பொன்னியின் செல்வன் திரைப்படம் இந்தியாவின் சிறந்த இயக்குனரான மணிரத்னம் இயக்கத்தில் இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் தயாராகும் படமாக பொன்னியின் செல்வன் தயாராகிவருகிறது.

இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சீயான் விக்ரம் ,ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, விக்ரம்பிரபு, ஜெயராம், பிரபு, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார்,  பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், லால், பாலாஜி சக்திவேல், சாரா அர்ஜுன், ரியாஸ்கான் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

கலை இயக்குனர் தோட்டா தரணியின் கலையில் ,இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒளிப்பதிவில் தயாராகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பரபரப்பாக நடைபெற்று வரும் பொன்னியின் செல்வன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியரில் உள்ள ஆர்சாவில் தொடங்கவுள்ளது. இதற்காக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குவாலியர் சென்றுள்ளனர். குவாலியர் விமான நிலையத்தில் நடிகர் கார்த்தி மற்றும் மணிரத்னத்துடன் நடிகர் பிரகாஷ்ராஜ் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு வீட்டில் தவறி விழுந்து இடது கையில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்ட நடிகர் பிரகாஷ்ராஜ் தற்போது பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.