மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட படைப்பு பொன்னியின் செல்வன். ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கல்கி எழுதிய இந்த பொன்னியின் செல்வன் நாவலை படமாக காண ஆவலாக உள்ளனர் திரை விரும்பிகள். 

இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தலால் தடைப்பட்டது. அதற்குப் பிறகு படப்பிடிப்புக்கான அனுமதி கிடைத்தாலும், பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடங்கப்படவே இல்லை. சுமார் 400 பேர் வரை படப்பிடிப்பில் இருக்கவேண்டிய சூழல் இருப்பதால், இப்போதைக்கு வாய்ப்புகள் குறைவுதான் எனத் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இன்று முதல் ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு துவங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் ஹைதராபாத் வந்துள்ளனர். அவர்கள் அனைவருக்குமே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஹோட்டல் அறையிலிருந்து படப்பிடிப்பு தளத்துக்கு வரவேண்டும், படப்பிடிப்பு முடிந்தவுடன் ஹோட்டல் அறைக்குச் செல்லவேண்டும், வேறெங்கும் பயணிக்கக் கூடாது என்று படக்குழுவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், படப்பிடிப்புத் தளத்துக்கு வந்துவிட்டால் பணிகள் அனைத்துமே முடித்துவிட்டுத்தான் வெளியே செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் படத்துக்காக 5 பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது தொடர்ச்சியாக 30 நாட்கள் வரை படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளார் மணிரத்னம். திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடைபெற்றால், இத்துடன் சுமார் 70% படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது. 

கடைசியாக இயக்குனர் மற்றும் நடிகரான பாலாஜி சக்திவேல் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் நம் செவிகளுக்கு எட்டியது. வரலாற்று சிறப்பு நிறைந்த படம் என்பதால் அதிக ஜூனியர் ஆர்டிஸ்டுகள் இருப்பார்கள். இத்தனை சவால் நிறைந்த இந்த படைப்பை மணிரத்னம் எப்படி கையாளப்போகிறார் என்ற ஆவலில் உள்ளனர் சினிமா விரும்பிகள்.