புகழ்பெற்ற எழுத்தாளர் அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் உருவாக்கியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளன. எழுத்தாளர் ஜெயமோகன் வசனங்கள் எழுதியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

பொன்னியின் செல்வன் நாவலில் ஆதித்த கரிகாலன், அருள்மொழி வர்மன் (எ) பொன்னியின் செல்வன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி, குந்தவை, சுந்தர சோழர், ஆழ்வார்க்கடியான் நம்பி, பெரிய பழுவேட்டரையர், சிறிய பழுவேட்டரையர், பூங்குழலி, மதுராந்தகன், பார்த்திபேந்திர பல்லவன், கொடும்பாளூர் வேளாளர் பூதி விக்ரம கேசரி, வானதி, ரவிதாஸன், செம்பியன் மாதேவி, சேந்தன் அமுதன், சம்புவரையர், அநிருத்த பிரம்மராயர்  உள்ளிட்ட பல கதாபாத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களாக விளங்குகின்றன.

இந்த கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், லால், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ரஹ்மான், விக்ரம் பிரபு, பிரபு, ஷோபித்தா, கிஷோர், ஜெயசித்ரா, அஸ்வின் காக்கமனு, நிழல்கள் ரவி, மோகன் ராமன் என உள்ளிட்டோர் நடித்துள்ளனர்

2 பாகங்களாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.  இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் அடுத்த 6 மாதங்கள் முதல் 9 மாதங்களுக்குள் வெளியாகும் என சுவாரசிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.