பிரம்மிக்க வைக்கும் பிரம்மாண்டத்தின் உச்சமாக இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் தயாராகியுள்ளது. அமரர் கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி 2 பாகங்களாக லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸாகிறது.

தொடர்ந்து 2-வது பாகமும் அடுத்த 6-9 மாதங்களுக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தோட்டா தரணியின் கலை இயக்கத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாடல்களுக்கு பிருந்தா மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

பொன்னியின் செல்வனின் முன்னணி கதாபாத்திரங்களாக விளங்கும் ஆதித்த கரிகாலனாக சீயான் விக்ரம், அருண்மொழி வர்மன் எனும் பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி, வல்லவரையன் வந்தியத்தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, நந்தினி மற்றும் மந்தாகினி என இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், பெரிய மற்றும் சிறிய பழுவேட்டரையர்களாக சரத்குமார் மற்றும் பார்த்திபன், சுந்தரசோழராக பிரகாஷ்ராஜ், கொடும்பாளூர் வேளாளர் பூதி விக்ரம கேசரியாக இளைய திலகம் பிரபு, பார்த்திபேந்திர பல்லவனாக விக்ரம் பிரபு, மதுராந்தகராக ரஹ்மான், பூங்குழலியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளனர்.

முன்னதாக வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் ட்ரைலர் மற்றும் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே எக்கச்சக்கமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், சமீபத்தில் வெளிவந்த ராட்சஸ மாமனே பாடலின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அசத்தலான அந்த மேக்கிங் வீடியோ இதோ…