மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராகத் திகழும் நடிகர் ஃபகத் பாசில். திரைத்துறையில் நடிகராக களம் இறங்கி கிட்டத்தட்ட 20 ஆண்டுகளை நெருங்கும் நடிகர் பகத் பாசில் தென்னிந்திய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து ஆகச்சிறந்த நடிகனாகாக வலம் வருகிறார்.
 
மலையாளத்தில் ஃபகத் பாசில் நடித்த காக்டைல், சாப்ப குரிஷூ, டைமன்ட் நெக்லஸ், பெங்களூர் டேஸ், டேக் ஆப், ஞான் பிரகாசன், மகேஷின்டே பிரதிகாரம் உள்ளிட்ட திரைப்படங்கள் இவரது சிறந்த நடிப்புக்கு உதாரணம். மேலும் கும்பலங்கி நைட்ஸ்,  ட்ரான்ஸ்,  இருள், ஜோஜி உள்ளிட்ட படங்களில் நடிப்பின் அரக்கனாக மிரட்டியிருப்பார்.
 
தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வேலைக்காரன், இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் டீலக்ஸ் திரைப்படங்களிலும் நடித்து இருந்தார். அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் திரைப்படத்திலும், தெலுங்கு ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடித்து உருவாகும் புஷ்பா திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் அடுத்ததாக ஃபகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள மாலிக் திரைப்படம் வருகிற ஜூலை 15ஆம் தேதி அமேசான் பிரைம் OTT தளத்தில் நேரடியாக வெளியாகிறது. மகேஷ் நாராயணன் எழுதி இயக்கியுள்ள மாலிக்  படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான அண்டோ ஜோசப் நிறுவனம் தயாரித்துள்ளது. 

நடிகர் ஃபகத் பாசிலுடன் இணைந்து நடிகை நிமிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்க, நடிகர் ஜோஜூ ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் மாலிக் திரைப்படத்தின் மிரட்டலான புதிய ட்ரெய்லர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புதிய ட்ரெய்லரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.