சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்துவருகிறார் தனுஷ். D43 என அறிவிக்கப்பட்ட இந்த படத்தில் டைட்டில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் பூஜையுடன் சென்னையில் படப்பிடிப்பை துவங்கியது படக்குழு. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. 

க்ரைம் திரில்லரான இந்த படத்தில் தனுஷ் பத்திரிகையாளர் ரோலில் நடிக்கவுள்ளார் என பேசப்படுகிறது. படத்தின் நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். படத்தின் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனத்துக்கான பொறுப்பைப் பாடலாசிரியர் விவேக் ஏற்றுள்ளார். 

இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார். இந்தப் படத்துக்காக 3 பாடல்களின் பணிகளை லாக்டவுன் சமயத்திலேயே ஜி.வி.பிரகாஷ் முடித்துக் கொடுத்துவிட்டார். சமீபத்தில் தனுஷ் பாடிய பாடலுடன் படப்பிடிப்பை துவங்கினர் படக்குழுவினர்.  கடந்த வாரம் இந்த படத்தின் முதல் பாடலை படமாக்கி முடித்துவிட்டனர். 

தற்போது ஹைதராபாத்தில் படத்தை படமாக்கி வருகின்றனர் படக்குழுவினர். ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து படத்தின் நாயகி மாளவிகா மோஹனன் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பேப்பர் பேனாவுடன் அமர்ந்து தான் நடிக்கும் காட்சிக்கு தயாராகிறார் போல் தெரிகிறது. மாஸ்டர் படத்தில் இவரது நடிப்பை பார்த்த ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்த D43 திரைப்படமும் அவரது திரைப்பயணத்தில் முக்கிய படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

நடிப்புலகின் அசுரனாக திகழ்பவர் நடிகர் தனுஷ். அசுரன் தனுஷ் என்னும் டேக் சமீபத்தில் ட்விட்டர் தளத்தை திருவிழாவாக மாற்றியது. ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அத்ரங்கி ரே இந்திப் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார் தனுஷ். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி அசத்தியது குறிப்பிடத்தக்கது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)