தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். கன்னடா, தமிழ், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். இவன் தந்திரன், விக்ரம் வேதா, ரிச்சி, கே13 போன்ற படங்களில் நடித்து அசத்தினார். புஷ்கர் - காயத்ரி இயக்கிய பிளாக்பஸ்டர் படமான விக்ரம் வேதா படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அதில் இடம்பெற்ற யாஞ்சி பாடல் ஹிட்டாக, தமிழ் ரசிகர்களின் மனதில் நெஞ்சாத்தியாக இடம் பிடித்து விட்டார் ஷ்ரத்தா. 

கடந்த ஆண்டு ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு சிறப்பான வருடம் என்றே கூறலாம். தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் போல்டான பாத்திரத்தில் நடித்து அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அருள் நிதி நடித்த கே13 மற்றும் தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான ஜெர்ஸி திரைப்படம் இவரின் திரைப்பயணத்தில் முக்கிய மைல்-கல்லாக அமைந்தது. 

இந்நிலையில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் பிறந்தநாளை முன்னிட்டு மாறா படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் ஷ்ரத்தா ரசிகர்கள். படத்திற்கு படம் வித்தியாசமான ரோல்களில் நடிக்கும் ஷ்ரத்தாவை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா. 

கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற படம் சார்லி. துல்கர் சல்மான் நாயகனாக நடித்த இந்த படத்தில் பார்வதி ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரைட்டாக உள்ளது. தமிழில் மாறா என்ற பெயரில் ரீமேக்காகிறது. 

இந்த படத்தை அறிமுக இயக்குனர் திலீப் குமார் என்பவர் இயக்குகிறார். மாதவன் மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் இதில் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். விக்ரம் வேதா திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இந்த ஜோடி இணைகிறது. ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்திற்கு கவிஞர் தாமரை பாடல் வரிகள் எழுதியுள்ளார். புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு செய்கிறார். ஸ்டாண்டப் காமெடியன் அலெக்ஸ் இதில் திரைக்கதை எழுதியுள்ளார்.

கொரோனா நோய் பரவல் ஆரம்பமாவதற்கு முன்னதாகவே இத்திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டதாம். படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் மற்றும் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் சமீபத்தில் துவங்கியது என்று படக்குழுவினர் தெரிவித்தனர். மாறா பற்றிய சமீபத்திய புதுப்பிப்பு என்னவென்றால், இப்படத்தை தயாரித்துள்ள பிரமோத் ஃபிலிம்ஸ், அமேசான் பிரைமுடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், விரைவில் நேரடியாக OTT தளத்தில் வெளியாகும் என்ற செய்தி இணையத்தில் வெளியாகி வருகிறது. அதிகாரப் பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே படத்தின் ரிலீஸ் பற்றி தெரியவரும். 

சமீபத்தில் இந்த படத்தின் பிரத்தியேக புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. படப்பிடிப்பு தளத்தில் மாதவன் கையில் காஃபி மக்குடன் காணப்படுகிறார். மேலும் ஷிவதா மற்றும் ஷ்ரத்தா கொண்ட மற்றோரு புகைப்படமும் ரசிகர்களை ஈர்த்தது. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த ருசிகர தகவல் நம் செவிகளுக்கு எட்டும் என்றே கூறலாம்.