மலையாள திரையுலகில் அசத்தி வரும் ஹீரோக்களில் ஒருவர் டொவினோ தாமஸ். மாயநதி, தீவண்டி, வைரஸ் போன்ற படங்களால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடித்த லூசிபர் படத்திலும் தனது நடிப்பால் அசத்தினார் டொவினோ. தமிழில் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான மாரி-2 படத்தில் வில்லனாக நடித்தார்.

டொவினா தாமஸ் தற்போது கால என்ற படத்தில் நடித்து வருகிறார். வி.எஸ்.ரோஹித் இயக்கும் இந்தப் படத்தில் திவ்யா பிள்ளை, லால் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். கால படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்கும் போது நடிகர் டொவினோ தாமஸூக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டதாகவும் அதனால் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியது. இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். 

டொவினோ தாமஸின் வயிற்றின் உட்பகுதியில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பதாகவும் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் அவர் இருந்து வருவதாகவும் கூறப்படும் நிலையில் விரைவில் அவர் நலம் பெற வேண்டும் என திரைத்துறையினர் பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். 

டொவினோ தாமஸ் கைவசம் மின்னல் முரளி என்ற படமும் உள்ளது. வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் தங்கள் நிறுவனத்தின் மிகப்பெரும் படைப்பாக நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில்,  பன்மொழியில் தயாரிக்கும் சூப்பர் ஹீரோ படத்திற்கு மின்னல் முரளி எனப்பெயரிட்டுள்ளது. ஹிந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என ஐந்து இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது. 

பாசில் ஜோசப் உருவாக்கும் இத்திரைப்படத்தில் சமீர் தாஹீர் ஒளிப்பதிவு செய்ய ஹாலிவுட் புகழ் விலாட் ரிம்பர்க் சண்டைப்பயிற்சி இயக்குனராக பணியாற்றியுள்ளார். வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் நிறுவனம் சார்பில் ஷோபியா பால் தயாரிக்கிறார். குரு சோமாசுந்தரம், அஜு வர்கீஸ், ஃபெமினா ஜார்ஜ், சினேகா பாபு, ஷெல்லி நபுகுமார், P பாலசந்திரன், பய்ஜு சந்தோஷ், சுர்ஜித், ஹரிஶ்ரீ அசோகன், மாமுக்கோயா, பிஜுகுட்டன், மற்றும் பல திறமைமிகு நடிகர்கள் டொவினோ தாமஸுடன் இணைந்து நடிக்கிறார்கள். ஷான் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

குறைந்த காலகட்டத்தில் மிகப்பெரிய ஹீரோவாக உயர்ந்து நிற்கும் டொவினோவுக்கு இப்படி ஆகிவிட்டதே என்ற கவலையில் உள்ளனர் அவரது ரசிகர்கள். மின்னல் முரளி படப்பிடிப்பின் போது கூட ஷூட்டிங் ஸ்பாட் செட்டுகளை மர்ம நபர்கள் இடித்தனர். அதன் பிறகு இந்த சம்பவம் டொவினோ ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.