திரையுலகில் எந்த ஒரு பாத்திரமாக இருந்தாலும், எந்த மொழி படமாக இருந்தாலும் அதை உள்வாங்கி சரியான நடிப்பை வெளிப்படுத்துபவர் நடிகர் மாதவன். கொரோனா காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்த தருணத்தில் நிசப்தம்/ சைலன்ஸ் திரைப்படத்தை அமேசான் ப்ரைமில் வெளியிட்டு அசத்தினார். நடிகராக மட்டுமில்லாமல் மாதவன் தன்னை இயக்குனராக அறிமுகப்படுத்திக்கொண்ட படம்  ராக்கெட்ரி: நம்பி விளைவு. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது. 

மாதவன் நடிப்பில் தற்போது உருவாகி டிசம்பர் மாத ரிலீஸுக்கு தயாராக இருக்கும் படம் மாறா. மலையாளத்தில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற சார்லி படத்தின் தமிழ் ரீமேக்காகும். இந்த படத்தை அறிமுக இயக்குனர் திலீப் குமார் என்பவர் இயக்குகிறார். மாதவன் ஜோடியாக நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் இதில் முக்கிய ரோலில் நடிக்கிறார். 

ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு செய்கிறார். ஸ்டாண்டப் காமெடியன் அலெக்ஸ் இதில் திரைக்கதை எழுதியுள்ளார். பிரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா தயாரித்துள்ளனர். 

இம்மாதம் டிசம்பர் 17-ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகிறது. இதன் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது மூன்றாம் பாடல் வெளியாகியுள்ளது. ஓ அழகே என்ற இந்த பாடலை பென்னி டயல் பாடியுள்ளார். தாமரை பாடல் வரிகள் எழுதியுள்ளார். படத்தின் ஆடியோ உரிமத்தை திங்க் மியூசிக் இந்திய கைப்பற்றியுள்ளது. 

மாறா திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் கொரோனா நோய் பரவல் ஆரம்பமாவதற்கு முன்னதாகவே முடிவடைந்துவிட்டது. படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் மற்றும் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் துவங்கி சமீபத்தில் நிறைவடைந்தது. கடந்த மாதம் மாறா படத்திற்கான டப்பிங் பணியையும் நிறைவு செய்தனர் படக்குழுவினர்.