மாநாடு திரைப்படத்தின்  இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன் உடன் இணைந்து S.J.சூர்யா கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி அமரன், பாரதிராஜா,S.A.சந்திரசேகர் என பலர் நடித்துள்ளனர். 

V ஹவுஸ் புரொடக்சன்ஸ் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இத்திரைப்படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் திடீரென இயக்குனர் வெங்கட் பிரபுவின் தாயார்  உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய வெங்கட்பிரபுவின் தாயார் மறைவு காரணமாக ரம்ஜான் அன்று வெளியாக இருந்த இத்திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு தள்ளிப் போனது. 

இந்நிலையில் மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி தற்போது இப்படத்தின் பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் இந்த நிலையில் மாநாடு படத்தின் பாடல் வெளியீடு மனிதமற்ற செயலாக இருக்கும் என தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, 

“பேரிடர் காலத்தில் தினமும் ஏதாவது இறப்பு செய்தி காதில் விழுந்துகொண்டே இருக்கிறது. யாரும் கொண்டாட்ட மனநிலையில் இல்லை. மருத்துவமனை வாசலிலும் கொரோனா பயத்திலும் இருக்கும் இச்சூழலில் இரக்கமற்று மாநாடு படத்தின் சிங்கிள் வெளியிடுவது மனித மற்ற செயலாக இருக்கும். லாக்டௌன் முடியட்டும் கொஞ்சமாவது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பட்டும் நண்பர்களே அதுவரைக்கும் மற்றவர்களுக்காக வேண்டியபடி காத்திருங்கள்.

நன்றி”

என தெரிவித்துள்ளார். மாநாடு திரைப்படத்தின் பாடல் வெளியீடு தள்ளிப் போனது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தாலும் அதற்கான காரணம் பாராட்டுகளை பெற்றுள்ளது. கடினமான காலகட்டத்தை கடந்து வர நாம் இருவரும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருக்க வேண்டும். நாட்டின் நலன் கருதி அனைவரும் கவசத்தை கட்டாயமாக அணிவோம் சமூக இடைவெளியை பின்பற்றுவோம் கொரோனாவிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வோம்.