இயக்குநர் ஏஆர்.முருகதாஸின் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான கத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தயாரிப்பு நிறுவனமாக அறிமுகமானது லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம். தயாரிப்பாளர் சுபாஷ்கரன் அல்லிராஜாவின்  லைகா புரோடக்சன் கத்தி திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா, செக்கச்சிவந்த வானம், வடசென்னை, 2.O, தர்பார் என பல வெற்றித் திரைப்படங்களை தயாரித்துள்ளது.

அடுத்ததாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 திரைப் படத்தை தயாரிக்கும் லைக்கா, தமிழ் திரையுலகின் கனவு திரைப்படமாக இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகிவரும் மிக பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் திரைப்படத்தையும்  தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் நிவாரணப் பணிகளுக்காக நிதியுதவி செய்யுமாறு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சில வாரங்களுக்கு முன்பு கோரிக்கை வைத்திருந்தார். இதனடிப்படையில் பலரும் நிதியுதவி அளித்து வந்தனர். முன்னதாக தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர் நடிகைகள் தயாரிப்பு நிறுவனங்கள் என பலரும் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து நிதியுதவி வழங்கினர். 

அந்த வகையில் லைக்கா நிறுவனம் தற்போது முதல்வரை நேரில் சந்தித்து நிதியுதவி வழங்கியுள்ளது.   லைக்கா நிறுவனத்தின் நிர்வாகிகளான திரு.ஜி.கே.எம். தமிழ்குமரன், திரு.நிருதன் மற்றும் திரு.கௌரவ் உள்ளிட்டோர் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து தயாரிப்பாளர் திரு.சுபாஷ்கரன் அல்லிராஜாவின்  லைகா நிறுவனம் சார்பில் 2கோடி ரூபாய் மதிப்புள்ள காசோலையை வழங்கினர். இந்த கடினமான பேரிடர் காலத்தில் பலரும் நிவாரண உதவிகளையும் நிதியுதவிகளையும் வழங்கி வரும் நிலையில் லைக்கா நிறுவனத்தின் இந்த நிதியுதவியை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.