பிரபல பாலிவுட் படங்களை தயாரித்து தனக்கென்ற ஒரு பெயரை பாலிவுட்டில் உருவாக்கி இந்திய சினிமாவில் பெரிதும் பேசப்பட்டு வரும் தயாரிப்பாளர்களில் ஒருவர் போனி கபூர். மேலும் பாலிவுட்டை தொடர்ந்து கோலிவுட்டிலும் கடந்த சில ஆண்டுகளாக பல படங்களை தயாரித்து வருகிறார். அதில் முக்கியாமானவை முன்னணி நட்சத்திரமான அஜித் குமார் இயக்குனர் எச் வினோத் உடனான கூட்டணி படங்கள்.

இந்த கூட்டணியே இன்று தென்னிந்திய சினிமாவில் அதிகம் கவனம் பெற்று வரும் நிலையில் அஜித்குமார் நடிப்பில் எச் வினோத் இயக்கிய 'துணிவு' வரும் பொங்கல் அன்று வெளியிடுவதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்திருந்தார். படத்திற்கான இறுதிக்கட்ட தயாரிப்பிலும் விளம்பரங்களில் முழு ஈடுபாட்டுடன் களம் இறங்கி உள்ளார் போனி கபூர்.

இதனிடையே போனிகபூரின் அடுத்த படம் குறித்த தகவல்களை பலர் எதிர்பார்த்த நிலையில் கடந்த ஆண்டு ஏ ஜி எஸ் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடிய  'லவ் டுடே'  திரைப்படத்தின் இந்தி ரீமேக்கான உரிமத்தை  தயாரிப்பாளர் போனி கபூர் கைப்பற்றி உள்ளார் என தகவல்கள் வெளியாகியது. இப்படத்தை இந்தியில் பிரபல இயக்குனர் டேவிட் தவான் இயக்கவுள்ளதாகவும் அவரது மகனும் முன்னணி நடிகருமான வருண் தவான் அதில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் சமூக வலைதளத்தில் தொடர்ந்து வெளியாகி வந்த நிலையில்  "லவ் டுடே இந்தி ரீமேக்கான உரிமத்தை நான் பெறவில்லை இதுகுறித்து வலை தளத்தில் பரவி வரும் அறிவிப்புகள் ஆதாரமற்றவை மற்றும் போலியானவை." என தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார் போனி கபூர்.

Please note that I have NOT acquired the remake rights of Love Today. All such reports on social media are baseless and fake.

— Boney Kapoor (@BoneyKapoor) January 2, 2023

துணிவு பட இறுதி கட்ட வேலையிலும், விளம்பர பணியிலும் தீவிரமாக உள்ள நிலையில் லவ் டுடே இந்தி ரீமேக் குறித்த போலி தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர்.  பொங்கல் ரேசில் வெற்றி பெற முழு வீச்சுடன் தயார் நிலையில் இருக்கும் துணிவு படத்தின் வெளியீட்டுக்கு பின்பே அவரது அடுத்த படத்திற்கான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஏற்கனவே இவரது தயாரிப்பில் அஜய் தேவ்கானின் ‘மைதான்’ திரைப்படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

'கோமாளி' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய லவ் டுடே அறிமுக நடிகர்களின் படங்களுக்கு வரவேற்பு என்பது இன்றைய சூழலில் அரிதாக பார்க்கப்பட்ட நிலையை மாற்றியது. சமகால காதல் கதையை நேர்த்தியான தொழில்நுட்ப வேலைகளுடன் முறையாக கொடுக்கபட்ட படம் என்பதால் அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்து  கடந்த ஆண்டு வெளிவந்த தமிழ் படங்களில் பாக்ஸ் ஆபிஸ் அடித்த திரைப்படமாக அங்கீகரிக்கப்பட்டது. இளமை துள்ளல்களுடன் இளைஞர்களை கவர்ந்த லவ் டுடே தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.