உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் படமாக வெளிவந்திருக்கும் விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக பட்டையை கிளப்பி வருகிறது.

உலகநாயகனின் தீவிர ரசிகரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சில நிமிடங்கள் தோன்றினாலும் அரங்கையே அதிர வைத்தார் நடிகர் சூர்யா.

கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவில் ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ள விக்ரம் படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் சிறப்பாக இசையமைத்துள்ளார். அன்பறிவு மாஸ்டர் ஸ்டண்ட் இயக்கத்தில் அத்தனையும் ஸ்டண்ட் காட்சிகளும் விக்ரம் திரைப்படத்தை மற்றொரு தளத்திற்கு எடுத்துச் சென்றது. குறிப்பாக ஏஜென்ட் டீணா கதாபாத்திரத்தின் சண்டைக்காட்சியில் ஒட்டுமொத்த திரையரங்கும்  ரசிகர்களின் ஆரவாரத்தால் அதிர்ந்தது.

பாக்ஸ் ஆபிஸில் புது வசூல் வேட்டையை தொடங்கியிருக்கும் விக்ரம் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த வெற்றி குறித்து நெகழ்ச்சியாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “நான் இதுவரை இவ்வளவு எமோஷனல் ஆனதில்லை... எனக்கும் விக்ரம் படத்திற்கும் நீங்கள் கொடுத்திருக்கும் இந்த அங்கீகாரம் அலாதியானது... எப்போதும் கமல்ஹாசன் சாருக்கும் அற்புதமான அணியினருக்கும் நன்றியோடு இருப்பேன்! Love You All🙏🙏🙏” என பதிவிட்டுள்ளார். லோகேஷ் கனகராஜின் எமோஷனலான அந்த பதிவு இதோ…