மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி மற்றும் நடிகர் முரளி இணைந்து நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான ஆனந்தம் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் லிங்குசாமி அடுத்து நடிகர் மாதவனுடன் இணைந்து ரொமான்டிக் ஆக்ஷன் திரைப்படமாக இயக்கிய ரன் படமும் மெகா ஹிட்டானது.

இதனையடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்த இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த சண்டக்கோழி, பீமா, பையா, வேட்டை உள்ளிட்ட திரைப்படங்கள் வரிசையாக ஹிட்டடித்தன. இருப்பினும் கடைசியாக லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த அஞ்சான் மற்றும் சண்டக்கோழி 2 ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை பெற தவறின.

இதனிடையே தற்போது மீண்டும் தான் ஒரு பிளாக்பஸ்டர் இயக்குனர் என நிரூபிக்கும் வகையில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் தயாராகி வருகிறது தி வாரியர் திரைப்படம். பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் நடிகர் ஆதி வில்லனாக நடிக்கிறார் இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் தி வாரியர் திரைப்படத்திற்கு சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்ய, தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். வருகிற ஜூலை 14-ம் தேதி தி வாரியர் படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ள நிலையில் தி வாரியர் படத்தின் டீசர் வரும் மே 14-ம் தேதி வெளியாகும் என தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.