பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த பழம்பெரும் நடிகர் திலிப் குமார் காலமானார். 1922ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவில் தற்போது உள்ள பாகிஸ்தான் பெஷாவர் நகரில் பிறந்தவர் திலீப்குமார்.

1944ஆம் ஆண்டு வெளிவந்த  ஜ்வார் பட்டா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான திலிப்குமார், தொடர்ந்து மிலன், அண்டாஸ், பாபுள், தேவதாஸ், லீடர், பாரி என பல சூப்பர் ஹிட் பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 1998ஆம் ஆண்டு வெளிவந்த கில்லா திரைப்படத்தில் நடித்திருந்தார். பிறகு திரைத்துறையில் இருந்து ஓய்வு பெற்றார்.
 
இந்நிலையில் 98 வயதான நடிகர் திலீப் குமார் கடந்த மாதம் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுதிணறல் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் திலீப் குமார் சில வாரங்களுக்கு முன்பு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். 

பின்னர் வீடு திரும்பிய ஒரே வாரத்தில் மீண்டும்  மூச்சுத்திணறல் ஏற்படவே மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். நடிகர் திலீப் குமாரின் துணைவியார் சாய்ராபானு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் ஒவ்வொரு நாளும் திலிப் குமாரின் உடல்நிலை பற்றிய தகவல்களை தெரிவித்து விரைவில் திலிப்குமார் உடல்நலம் தேறி வீடு திரும்ப அனைவரையும் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொண்டார். 

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பழம்பெரும் நடிகர் திலீப் குமார் இன்று காலை உயிரிழந்துள்ளார். இந்தியாவின் பழம்பெரும் நடிகரான திலீப் குமாரின் மறைவு ஒட்டுமொத்த இந்திய திரையுலகினருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மறைவுக்கு இந்திய திரையுலகமும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.