இயக்குனர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் ஏபி புரொடக்ஷன் தயாரித்து, இந்த வருடம் மார்ச் மாதம் வெளியான திரைப்படம் தேன். நடிகர் தருண் குமார் மற்றும் நடிகை அபர்ணதி நடித்து வெளிவந்த தேன் திரைப்படம்  மலைவாழ் கிராம மக்களின் வாழ்வியலை அடிப்படையாக கொண்ட அழகான திரைப்படமாக வெளிவந்தது. இசையமைப்பாளர் சனத் பரத்வாஜ் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
 
மலை கிராமத்தில் வசிக்கும் மக்களின் வாழ்வியலையும் அந்த வாழ்வில் இருக்கும் துயரங்கள் மற்றும் அழகான விஷயங்கள் என அனைத்தையும் மிகச் சரியாகவும் நேர்த்தியாகவும் காட்டிய ஒரு சில தமிழ் திரைப்படங்களில் தேன் திரைப்படம் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளது. 

முன்னதாக மலை கிராமங்களில் வசிக்கும் மக்களின் வாழ்வியலை அழகாக படமாக்கிய மேற்கு தொடர்ச்சி மலை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்து விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தேன் திரைப்படமும் எதார்த்தமான உணர்வுகளோடு மனதை உருக்கும் திரைப்படமாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 
சில வாரங்களுக்கு முன்பு SONY Liv OTT நிறுவனம் தமிழ் திரைப்படங்களை வெளியிட உள்ளதாக அறிவிப்புகள் வெளியான நிலையில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியானது. அந்த வகையில் SONY Liv OTT தளத்தில் முதல் தமிழ்த் திரைப்படமாக விமர்சன ரீதியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற தேன் திரைப்படம் தற்போது வெளியாக உள்ளது. 

இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெரிவிக்கும் விதமாக ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. வருகிற ஜூன் 25ஆம் தேதி தேன் திரைப்படம் SONY Liv OTT தளத்தில் வெளியாக உள்ளது. தற்போது வெளியாகி உள்ள தேன் திரைப்படத்தின் புதிய டிரெயிலர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.