தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கிய லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில், நடிகர் சரத்குமார் கதாநாயகனாக நடித்த அரண்மனை காவலன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் தயாரிப்பாளராக களம் இறங்கியவர் தயாரிப்பாளர் K.முரளிதரன் அவர்கள். தொடர்ந்து தமிழ் சினிமாவில் 20 திரைப்படங்களுக்கும் மேல் தனது லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார்.

உலக நாயகன் கமல்ஹாசனின் அன்பே சிவம், தளபதி விஜயின் பகவதி & பிரியமுடன், அஜித் குமாரின் உன்னைத் தேடி, சூர்யாவின் உன்னை நினைத்து, தனுஷின் புதுப்பேட்டை, சிலம்பரசன்.TR சிலம்பாட்டம், ஜெயம் ரவியின் தாஸ், சரத்குமாரின் அரண்மனைக் காவலன், வேலுச்சாமி, தோஸ்த் & ஒருவன், நவரச நாயகன் கார்த்திக்கின் கோகுலத்தில் சீதை, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், உனக்காக எல்லாம் உனக்காக & கண்ணன் வருவான் பிரபு தேவாவின் உள்ளம் கொள்ளை போகுதே உள்ளிட்ட திரைப்படங்கள் லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் K.முரளிதரன் தயாரித்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, திரிஷா, அஞ்சலி இணைந்து நடித்த சகலகலா வல்லவன் திரைப்படத்தை K.முரளிதரன் தயாரித்திருந்தார். இந்நிலையில் தயாரிப்பாளர் K.முரளிதரன் காலமானார் என தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான திரு.தனஞ்செயன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

திடீரென மாரடைப்பால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர் முரளிதரன் தனது சொந்த ஊரான கும்பகோணம் மரணமடைந்தார். தயாரிப்பாளர் K.முரளிதரன் அவர்களின் மறைவுக்கு தமிழ் திரை உலகை சார்ந்த முன்னணி பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தயாரிப்பாளர் K.முரளிதரன் அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு கலாட்டா குழுமம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

Sad & shocking to learn popular producer @lmmiltd #KMuralidharan sir passed away due to Heart attack. He was a gentle & nice human being 🙏#ripKMuralidharan sir pic.twitter.com/KGYFMeV7IO

— Dr. Dhananjayan BOFTA (@Dhananjayang) December 1, 2022