பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசிய நடிகை லக்ஷ்மி மேனன் !
By Sakthi Priyan | Galatta | September 27, 2020 10:50 AM IST
பள்ளி படிக்கும் காலத்திலேயே சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி அதிகளவு ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை லக்ஷ்மி மேனன். கேரளாவில் இருந்து வந்து தமிழ் சினிமாவை கலக்கிய நடிகைகளில் இவரும் ஒருவர். தமிழில் லக்ஷ்மி மேனன் நடித்த முதல் படம் சுந்தர பாண்டியன். சசிகுமார் ஜோடியாக நடித்து அசத்தியிருப்பார். அதனை தொடர்ந்து விக்ரம் பிரபுவுடன் நடித்த கும்கி படமும் மிகப்பெரிய அளவில் அவரை பிரபலமாக்கியது.
அதன் பின் தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். 2015-ல் தல அஜித்தின் தங்கையாக வேதாளம் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடைசியாக லக்ஷ்மி மேனன் நடிப்பில் றெக்க படம் 2016-ல் வெளிவந்தது. அதன் பின் நான்கு வருடங்களாக வேறு எந்த புதிய படங்களிலும் நடிக்காமல் இருக்கிறார் லக்ஷ்மி மேனன். அவர் தனது கல்லூரிப் படிப்பில் கவனம் செலுத்தி வந்தார் என அவ்வப்போது தகவல்கள் மட்டும் வந்தது.
தற்போது லக்ஷ்மி மேனன் தன்னுடைய உடல் எடையை அதிக அளவு குறைத்து மிகவும் ஒல்லியாக மாறியிருக்கிறார். கடந்த சில வாரங்களாக அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுவரும் புகைப்படங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. லக்ஷ்மி மேனனா இப்படி மாறி விட்டார் என பலரும் ஆச்சர்யம் அடைந்து இருக்கிறார்கள். பலரும் நீங்கள் எப்போது மீண்டும் நடிக்க துவங்க போகிறீர்கள் என அவரிடம் கேள்வி எழுப்பினார்கள்.
சென்ற கொரோனா லாக்டவுன் நேரத்தில் கூட லக்ஷ்மி மேனன் பரதநாட்டியம் முயற்சி செய்யும் வீடியோக்களை அதிக அளவு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார். அவற்றுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ள நடிகை லக்ஷ்மி மேனன் அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.
சமீபத்தில் நடிகை லக்ஷ்மி மேனன் வெளியிட்ட புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. அதில் சேலை அணிந்திருந்த லக்ஷ்மி மேனன், நெற்றியில் பெரிய பொட்டு, லிப்ஸ்டிக் என பாரம்பரிய கெட்டப்பில் இருந்தார். அவர் வரைந்திருக்கும் டாட்டூவை குறிப்பிட்டு கமெண்ட் செய்து ட்ரெண்ட் செய்தனர் அவரது ரசிகர்கள்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் லக்ஷ்மி மேனன். பலரும் லக்ஷ்மி மேனனை பிக்பாஸில் கலந்துகொள்வதாக வதந்தி பரப்புவதாகவும், சமூக வலைதளங்களில், சில செய்திகளில் யூகங்களாக எழுதுவதாகவும் தெரிவித்த லஷ்மி மேனன், எப்போதும் அந்த நிகழ்ச்சியில் தான் கலந்துகொள்ளப்போவதில்லை எனவும், எனது தனிப்பட்ட வாழ்க்கையை ஷோவுக்காக யார் முன்பாகவும் வாழ்ந்துகாட்ட எனக்கு அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாத்திரங்களைக் கழுவுவதும், டாய்லெட்டைக் கழுவுவதும் கேவலமா என வந்த பின்னூட்டங்களுக்கும், தனிச்செய்திக்கும் வீடியோ ஸ்டோரி மூலமாக பதிலளித்த லஷ்மி, என் வீட்டில் நான் பாத்திரங்களைக் கழுவுவேன். ஒரு ஷோவுக்காக பாத்திரங்கள் கழுவுவதும், டாய்லெட்டைக் கழுவுவதும் எனக்கு அவசியமில்லை. என் முடிவுகளை, தேர்வுகளைக் கேள்விகேட்க உங்களுக்கு உரிமையுமில்லை என பதிலளித்திருக்கிறார். லக்ஷ்மி மேனனின் இந்த துணிச்சலான பதிவுகளை அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.