தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகை நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் திரைப்படத்திலிருந்து முதல் பாடல் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 2011 ஆம் ஆண்டு  வெளிவந்த பிளைன்ட் என்ற கொரியன் திரைப்படத்தை தழுவி உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இயக்குனர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் கிராஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் நெற்றிக்கண் திரைப்படத்தை தமிழ் சினிமாவின் சிறந்த திகில் படங்களில் ஒன்றான அவள் திரைப்படத்தை இயக்கிய மில்லின்ட் ராவ் இயக்குகிறார். தமிழ் சினிமாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான R.Dராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இத்திரைப்படத்திற்கு அவள் திரைப்படத்தின் இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைக்கிறார். 

கடந்த வருடம் நடிகை நயன்தாராவின் பிறந்த நாளான நவம்பர் 18ஆம் தேதி நெற்றிக்கண் திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் முதல் பாடலான இதுவும் கடந்து போகும் பாடல் தற்போது வெளிவர தயாராக உள்ளது. தமிழ் சினிமாவின் முக்கியமான பாடலாசிரியர்களில் ஒருவரான கார்த்திக் நேத்தா நெற்றிக்கண்  திரைப்படத்தின் இதுவும் கடந்து போகும் என்ற முதல் பாடலை எழுதியுள்ளார்.

சிட் ஸ்ரீராமின்  குரலில் வெளிவரவுள்ள இதுவும் கடந்து போகும் பாடல் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு தற்போது அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு குறித்து படக்குழு வெளியிட்டுள்ள புதிய போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முன்னதாக இதுவும் கடந்து போகும் பாடலின் புரோமோ வீடியோ சிட் ஸ்ரீராமின்  பிறந்தநாளன்று வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.