இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான படம் நந்தலாலா. இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் கலையரசன். அதைத் தொடர்ந்து அட்டக்கத்தி, முகமூடி, மதயானைக் கூட்டம், டார்லிங், உறுமீன் போன்ற படங்களில் நடித்தார். ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் திரைப்படம் இவரின் திரைப்பயணத்தில் மிக முக்கியமானது என்றே கூறலாம். அந்த படத்தில் வரும் அன்பு பாத்திரத்தை யாராலும் மறக்க முடியாது. 

நீலம் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் கலையரசன், அஞ்சலி பாட்டீல் நடித்துள்ள படம் குதிரைவால். இந்த படத்தை பா.ரஞ்சித் வெளியிடுகிறார். வழக்கமான படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் - ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இயக்கியுள்ளனர். பிரதீப் குமார் மற்றும் மார்ட்டின் விஸ்ஸர் இசையமைக்கின்றனர். 

படத்தின் கதையை ராஜேஷ் எழுதியிருக்கிறார். உளவியல், ஆள் மன கற்பனைகள் , மற்றும் டைம் டிராவல் குறித்த ஒரு அறிவியல் புனைவுப்படமாகவும், வழக்கமான சினிமாவிலிருந்து மாறுபட்டதாகவும் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவில் இது ஒரு புதிய முயற்சியாகவும், புதிய அனுபவத்தைக் கொடுக்கும் விதமாகவும் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளனர். படத்தின் பெரும்பாலான காட்சிகள் கிராபிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. யாழி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி சமூக வலைதளத்தில் சக்கை போடு போட்டது. இந்நிலையில் படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. நகைச்சுவையான இந்த டீஸரில் கலையரசனுக்கு வால் முளைத்துள்ளது. டீஸரை பார்த்த ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். 

நடிகர் கலையரசனுக்கு இந்த ஆண்டு ஸ்பெஷல் என்றே கூறலாம். லாக்டவுனில் கெளதம் மேனன் இயக்கிய ஒரு சான்ஸ் குடு பெண்ணே பாடலில் நடித்திருந்தார். ஷாந்தனு, மேகா ஆகாஷ் நடித்த இந்த பாடல் ஆல்பம் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. 

இதைத்தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம் படத்திலும் முக்கிய ரோலில் நடித்துள்ளார் கலையரசன். எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் உருவான இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. பா. ரஞ்சித் இயக்கி வரும் படத்திற்காக கலையரசனின் ஒர்க்அவுட் வீடியோவை பகிர்ந்தார் ஆர்யா. இந்த வீடியோ இணையத்தில் அசத்தியது.