நயன்தாரா நடித்திருந்த மூக்குத்தி அம்மன் படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்த இந்த படத்தில் மவுலி, ஊர்வசி, அஜய் கோஷ் உட்பட பலர் நடித்திருந்தனர். இதில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாக நடித்திருந்தார். இந்த பாத்திரம் ரசிகர்களை பெரிதளவில் கவர்ந்தது. 

தற்போது நிழல் என்ற மலையாள த்ரில்லர் படத்தில் நடிக்கிறார் நயன்தாரா. குஞ்சாக்கோ போபன் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தை அப்பு என் பட்டாத்திரி இயக்குகிறார். இதன் ஷூட்டிங் எர்ணாகுளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது. குஞ்சாக்கோ போபனும் நயன்தாராவும் ஏற்கனவே டிவென்டி 20 படத்தில் சின்ன காட்சியில் நடித்திருந்தனர். 12 வருடங்களுக்குப் பிறகு இப்போது மீண்டும் சேர்ந்து நடிக்கின்றனர்.

இதன் ஷூட்டிங்கில் நயன்தாரா கலந்துகொண்ட புகைப்படங்கள் வைரலாகின. பின்னர் நயன்தாரா, குஞ்சாக்கோ போபன் வீட்டுக்கு திடீரென சென்றார். அங்கு குஞ்சாக்கோ போபன், அவர் மனைவி, குழந்தையுடன் நயன்தாரா எடுத்துக்கொண்ட போட்டோ வைரலானது. இந்நிலையில், நிழல் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்தது என தகவல் தெரியவந்துள்ளது. ஒரு மாத காலத்தில் படப்பிடிப்பை முடித்து விட்ட படக்குழுவை பாராட்டி வருகின்றனர் ரசிகர்கள்.

இதன் பிறகு நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் நெற்றிக்கண். விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை மிலிந்த் ராவ் இயக்கிவருகிறார். ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு கிரிஷ் இசையமைக்கிறார். திலீப் சுப்ராயன் ஸ்டண்ட் இயக்கம் செய்கிறார். லாரன்ஸ் கிஷோர் எடிட்டிங் செய்கிறார். நயன்தாரா பார்வையற்றவராக நடித்துள்ள இந்த படத்தின் டீஸர் கடந்த மாதம் வெளியானது. 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார் நயன்தாரா. சிவா இயக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதிஷ், குஷ்பு என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. 

ஒரு புறம் தொடர்ச்சியாக படங்கள் இருந்தாலும், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நயன்தாரா கவனம் செலுத்த உள்ளதாக தெரிகிறது. விஜய்சேதுபதி ஹீரோவாக நடிக்கவிருக்கும் இந்த படத்தில் சமந்தாவும் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார். இந்த ஆண்டு காதலர் தினத்தன்று படத்தின் அறிவிப்பு வெளியானது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.