தமிழ் படங்களில் தொடர்ச்சியாக நடித்தாலும் தனுஷின் ஹாலிவுட், பாலிவுட் திரைப்பயணம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. தற்போது தி கிரே மேன் படப்பிடிப்பில் நடித்து வருகிறார் தனுஷ். நடிகர் தனுஷுக்கு ஆறிலிருந்து அறுபது வரை என ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. 

குறிப்பாக குட்டீஸ் ரசிகர்கள்  ஏராளம். தனுஷின் பாடல், நடனம் என கொண்டாடி விடுவார்கள். இந்நிலையில் மழலை ரசிகை ஒருவர், கண்டா வரச்சொல்லுங்க பாடலுக்கு வாயசைத்து ரிகிரியேட் செய்துள்ளார். இந்த வீடியோ இணையவாசிகளை ஈர்த்து வருகிறது. 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ரஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் கர்ணன். தாணு தயாரிப்பில் வெளியாகியுள்ள இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

ஏப்ரல் 9-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. இதுவரை வெளியான தனுஷ் படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையையும் கர்ணன் பெற்றுள்ளது. இந்நிலையில் மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளது. இதை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று உறுதி செய்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: கர்ணன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நானும் மாரி செல்வராஜும் மீண்டும் ஒருமுறை இணைகிறோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். முன் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்று கூறியுள்ளார்.

நடிகர் தனுஷ் கைவசம் D43 படமும் உள்ளது. இதை கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார். மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.