கே ஜி எஃப் என்ற ஒரு திரைப்படம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் கன்னட சினிமாவின் பக்கம் திருப்பியது. கன்னட திரையிலகின் முன்னணி கதாநாயகனாக திகழும் நடிகர் யாஷ் , ராக்கி பாய் என்ற கதாபாத்திரத்தில் கேஜிஎப் திரைப்படத்தில் கதாநாயகனாக மிரட்டியிருந்தார்.

பிரபல இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎப் 1 திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட இந்தியாவின் பல மொழிகளில் வெளியாகி மெகா ஹிட் ஆனது. இந்நிலையில்  அடுத்ததாக கே ஜி எஃப் சாப்டர் 2 என இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.

நடிகர் யாஷுடன் இணைந்து நடிகை ஸ்ரீநிதி செட்டி கதாநாயகியாக நடிக்கும் கேஜிஎப் 2 திரைப்படத்தில் நடிகர்கள் சஞ்சய்தத் , பிரகாஷ்ராஜ் மற்றும் நடிகை ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். 

முன்னதாக வெளியான கேஜிஎப் 2 திரைப்படத்தின் டீஸர் இந்திய அளவில் எந்த திரைப்படமும் செய்யாத மாபெரும் சாதனையை யூடியூபில் படைத்தது. பரபரப்பாக நடைபெற்று வரும் கேஜிஎப் 2 திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகளுக்கு நடுவே திரைப்படத்தின் பாடல் உரிமம் பற்றிய முக்கிய தகவல் வெளியானது. 

இத்திரைப்படத்தின் பாடல் உரிமங்களை பிரபல இசை நிறுவனமான லஹரி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் கே ஜி எஃப் திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.