தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக திகழ்பவர் நயன்தாரா. இவரது நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் அறம். கோபி நாயனார் இந்த படத்தை இயக்கிஇருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமின்றி நயன்தாராவுக்கு மிகப் பெரிய புகழை பெற்றுத்தந்தது. நயன்தாரா நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேடங்களில் நடிக்க ஆரம்பித்தது இந்த படத்தின் வெற்றி தந்த தன்னம்பிக்கையால் தான் என்றே கூறலாம். 

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அறம் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அறம் 2 திரைக்கதை தயாராகி விட்ட நிலையில் லாக்டவுன் முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும் ஆங்காங்கே செய்திகள் வெளியாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் நயன்தாராவுக்கு பதில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. 

இது குறித்து கீர்த்தி சுரேஷ் தரப்பினரிடம் கேட்கையில், அப்படியேதும் இல்லை என்று மறுத்துள்ளனர். அறம் 2 படக்குழுவினர் யாரும் கீர்த்தி சுரேஷை அணுகவில்லை என்றும் தெளிவாக விளக்கமளித்துள்ளனர். ரசிகர்கள் இதுபோன்ற வதந்திகளை நம்பி ஏமாறவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பெண்குயின் திரைப்படம் நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து நரேந்திர நாத் இயக்கத்தில் உருவாகி வரும் மிஸ் இந்தியா, சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த, நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் குட் லக் சகி, வெங்கி இயக்கத்தில் ரங் தே போன்ற படங்களில் நடிக்கவுள்ளார் கீர்த்தி சுரேஷ்.