மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை தொடங்கி பின் கதாநாயகியாக மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் அசத்திவரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது கடின உழைப்பாலும் சிறந்த நடிப்பாலும் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகையாக உயர்த்து வருகிறார். 

சமீபத்தில் கோவிட் 19 தொற்றுக்குள்ளான கீர்த்தி சுரேஷ் சில தினங்களுக்கு முன்பு வைரஸ் தொற்று இருந்து மீண்டு வந்து படப்பிடிப்புகளை தொடர்ந்து வருகிறார். அந்த வகையில் மலையாள நடிகர் டொவினோ தாமஸ் உடன் இணைந்து நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வந்த வாஷி திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்தது.
 
முன்னதாக இயக்குனர் செல்வராகவன் முதல் முறை நடிக்கும் சாணிக் காயிதம் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், வேதாளம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்காக மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் போலா ஷங்கர் படத்தில் சிரஞ்சீவியின் தங்கையாகவும், மகேஷ்பாபு கதாநாயகனாக நடித்து வரும் சர்க்கார் வாரி பாட்டா படத்திலும் கதாநாயகியாகவும்  நடித்து வருகிறார்.

இதனிடையே கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தெலுங்கு மற்றும் ஹிந்தி என இரு மொழிகளில் தயாராகியுள்ள குட் லக் சகி திரைப்படம் வருகிற ஜனவரி 28-ம் தேதி ரிலீஸாகவுள்ளது. இயக்குனர் நாகேஷ் குக்குன்னூர் இயக்கத்தில் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள குட் லக் சகி திரைப்படத்தில் நடிகர்கள் ஜெகபதி பாபு மற்றும் ஆதி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

வொர்த் எ ஷாட் மோஷன் ஆர்ட்ஸ் தயாரிப்பில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் வெளியிடும் குட் லக் சகி படத்திற்கு சிரத்தன் தாஸ் ஒளிப்பதிவு செய்ய, தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் குட் லக் சகி திரைப்படத்தின் கலக்கலான ட்ரைலர் தற்போது வெளியானது. சமூகவலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள அந்த ட்ரைலர் இதோ…