மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த கீதாஞ்சலி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து இயக்குனர் A.L.விஜய் இயக்கத்தில் உருவான இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.

தளபதி விஜய்யுடன் பைரவா & சர்கார், தனுஷுடன் தொடரி, சீயான் விக்ரமுடன் சாமி 2 , சிவகார்த்திகேயனுடன் ரஜினிமுருகன் & ரெமோ, என தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த, இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கும் சாணி காயிதம், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் சர்க்காரு வாரி பாட்டா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

மறைந்த நடிகையர் திலகம் சாவித்திரி அவர்களின் பயோபிக் திரைப்படமான மகாநதி படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகை கீர்த்தி சுரேஷ் தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து திரைத்துறையில் சிறந்த படங்களை கொடுத்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை படைத்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 10 மில்லியன் எனும் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. தென்னிந்தியாவின் சிறந்த நடிகையாகவும் அதிக ரசிகர்களின் அபிமானம் பெற்ற கதாநாயகியாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியை தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.