தமிழ் திரையுலகில் சிறந்த நடிகராக அசத்தியவர் அருண் பாண்டியன். இவர் நடித்த இணைந்த கைகள், தேவன், ஊமை விழிகள் போன்ற படங்களை இன்றளவும் ரசித்து வருகின்றனர் திரை விரும்பிகள். சிறந்த நடிகராக இருந்த அருண் பாண்டியன், சீரான தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்து அசத்தினார். இவரது மகள் கீர்த்தி பாண்டியன் தற்போது தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 

தும்பா படத்தில் அறிமுகமான கீர்த்தி பாண்டியன், தற்போது ஹெலன் படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை கோகுல் இயக்கவுள்ளார். அப்பா - மகள் உறவை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தில் கீர்த்தி பாண்டியன் உடன் அவரது தந்தை அருண் பாண்டியனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கொரோனா ஊரடங்கால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்ட நிலையில் சொந்த ஊருக்குச் சென்ற கீர்த்தி பாண்டியன் விவசாய பணிகளை செய்து அதை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். திருநெல்வேலியில் குடும்பத்துடன் பண்ணை வீட்டில் இருக்கிறார். 

முன்னர் ட்ராக்டரில் நிலத்தை உழும் வீடியோவை பதிவு செய்தார் . தற்போது வயலில் நாத்து நடும் வீடியோவை பதிவிட்டுள்ள அவர், என் வாழ்வில் மிகவும் சிறப்பான ஒரு செயலை செய்திருக்கிறேன். இந்த கலையை கற்றுக்கொள்கிறேன் என பதிவு செய்துள்ளார். 

இந்நிலையில் தனது வீட்டுக்குள் வந்த பாம்பை தனி ஒரு ஆளாக துணிச்சலாக பிடித்த ரம்யா பாண்டியன், அதை அடிக்காமல் பக்கெட்டில் போட்டு வெளியே கொண்டு விட்டுள்ளார். அதை வீடியோ பதிவாக தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கீர்த்தி பாண்டியன் பதிவிட்டுள்ளார். பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால் பாம்பைக் கண்டு பயப்படாமல், அதேவேளையில் அதை அடித்துக் கொள்ளாமல் பாதுகாப்பாக வெளியில் கொண்டு விட்டு பலருக்கு புதிய பாடம் புகட்டியுள்ளார் நடிகை கீர்த்தி பாண்டியன்.