மாரி செல்வராஜ் இயக்குனராக அறிமுகமான படம் பரியேறும் பெருமாள். கதிர், ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை பா.இரஞ்சித் தயாரித்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் கதிர் - ஆனந்தி இருவரும் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

புதுமுக இயக்குநர் ஸாக் ஹாரிஸ் இயக்கவுள்ள இந்தப் படத்தில் கதிர், ஆனந்தி இருவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நரேனும் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை ஏஏஏஆர் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. த்ரில்லர் டிராமா பாணியில் இந்தப் படம் உருவாகவுள்ளது. கதிர், ஆனந்தி, நரேன் ஆகியோருடன் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

அனைத்தும் முடிவானவுடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் படத்தைத் தொடங்கி, கோடை விடுமுறைக்குப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளது படக்குழு. இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் கேரளாவில் நடைபெறவுள்ளது.

AAAR Productions நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கூறும்போது தமிழ் திரை உலகில் இது எங்களின் முதல் திரைப்படம். தொடர்ந்து கனமான கதைகள் கொண்ட, ரசிகர்கள் விரும்பும் தரமான படங்களளை தயாரிப்போம். குறிப்பாக புத்தம் புது ஐடியாக்களுடன் போராடும் புதிய இளம் திறமையாளர்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்த விரும்புகிறோம். இயக்குனர் ஸாக்  ஹாரிஸ் லண்டனில் மிக உயர்ந்த கல்லூரியில், திரைப்பட பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.மேலும் தமிழ் சினிமாவில் பல்வேறு திறன் மிகு கலைஞர்களுடன் வேலை செய்துள்ளார். இத்திரைப்படத்தை மிக தரமான படைப்பாக உருவாக்குவார் எனும் நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார். 

கடந்த ஆண்டு வெளியான கைதி படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் நரேன். லோகேஷ் கனகராஜ் இயக்கிய அந்த படத்தில் காவல் அதிகாரியாக தனது பாத்திரத்தில் கச்சிதம் காண்பித்திருந்தார்.ஆனந்தி கடந்த வருடம் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தில் நடித்திருந்தார். தற்போது ஷாந்தனு நடித்து வரும் இராவண கோட்டம் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பிகில் படத்தில் தளபதி விஜய்யுடன் நடித்த கதிர் ரசிகர்களை கவர்ந்தார். அதன் பிறகு ஜடா எனும் படத்தில் நடித்தார். ஒரு வருட இடைவெளிக்கு பிறகு இந்த திரைப்படம் உருவாவதால், மிகுந்த ஆவலில் உள்ளனர் திரை ரசிகர்கள்.