மனிதர்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகிவிட்ட கரடி பொம்மைகளுக்கு உயிர்வந்தால் என்னவாகும் என்ற கருத்தாக்கத்தில் கடந்த 2012-ல் ஹாலிவுட்டில் வெளியாகி ஹிட்டடித்த படம் ‘TED'. அந்த கருத்தாக்கத்தை எடுத்துக்கொண்டு, தமிழ்ச் சூழலுக்கு ஏற்ப, விலை மதிக்கமுடியாத மனிதர் உறுப்புகளைத் திருடும் கும்பலை மையமாக வைத்து டெடி கதையை எழுதியிருக்கிறார் சக்தி சௌந்தர்ராஜன். 

சாகாமல் கோமாவுக்கு சென்ற சாயிஷாவின் ஆவி எப்படி டெடிக்குள் செல்கிறது என்கிற லாஜிக் எல்லாம் பார்த்து டைம் வேஸ்ட் பண்ணாமல், டெடி பியர் செய்யும் க்யூட்டான அட்டகாசங்களை குழந்தைகள் எந்தவொரு ஏழாம் அறிவும் இல்லாமல் அழகாக கண்டு ரசிக்கின்றனர். 

டெடி ரைம்ஸ், டெடி வரும் காட்சிகள் அனைத்தும் குழந்தைகள் ரசிக்கும் படி அழகாக படமாக்கி இருக்கிறார் இயக்குநர் சக்தி செளந்தர் ராஜன். கூடவே பெரியவர்கள் படத்தை பார்க்க மருத்துவ மாஃபியாவையும் இலவச இணைப்பாக இணைத்துள்ளார். தியேட்டரில் படம் வெளியாகி இருந்தால், குழந்தைகள் பெற்றோர்களை நிச்சயம் நச்சரித்து தியேட்டர்களுக்கு அழைத்துச் சென்று இருப்பார்கள்.

பொதுவாக இது போன்ற படங்களில் அதிகமாக சிஜி வேலைகள் இடம்பெற்று இருக்கும். ஆனால், டெடி படத்தை பார்த்த அனைவருமே, படம் இவ்ளோ தத்ரூபமாக இருக்கே, டெடி பியருக்குள்ள யார் இருந்தா? என்கிற கேள்வியை எழுப்பி வருகின்றனர். 

இந்நிலையில், டெடி திரைப்படத்தை பார்த்த நடிகர் கருணாகரனின் மகள் டீகோட் செய்யும் அழகான வீடியோவை இயக்குநர் சக்தி செளந்தர் ராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

சூதுகவ்வும், இன்று நேற்று நாளை, ஜிகர்தண்டாடெடி உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களில் காமெடி நடிகராக கலக்கி வரும் நடிகர் கருணாகரனின் மகள், டெடி பொம்மைக்குள்ள யாரோ இருக்காங்க, ஒரு பையனோ இல்லை ஒரு பொண்ணோ இருந்து தான் இப்படி நடிச்சிருக்காங்கன்னு க்யூட்டா சொல்ல, பையன் தான்மான்னு கருணாகரன் பேசும் வீடியோவை இயக்குநர் சக்தி செளந்தர் ராஜன் ஷேர் செய்துள்ளார்.

நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான சுஜா வருணி தனது குட்டிப் பையன் டெடி படத்தை பார்த்து வீட்டில் உள்ள டெடி பியருடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை நடிகர் ஆர்யாவுக்கு டேக் செய்துள்ளார். நடிகர் ஆர்யாவும் சுஜாவின் வீடியோவை பார்த்து இது ரொம்ப க்யூட் என பதிவிட்டுள்ளார். குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட படமாக ஆர்யாவின் டெடி வெற்றிநடை போடுகிறது.