தமிழ் திரை உலகில் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராக விளங்கும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது முதல் திரைப்படமான பீட்சா திரைப்படத்திலேயே அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பியவர். இதனை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த ஜிகர்தண்டா திரைப்படம் இந்திய அளவில் கவனிக்கப்பட்டது.

சினிமா ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்த சிறந்த மியூசிக்கல் கேங்ஸ்டர் பிளாக் காமெடி திரைப்படமாக வெளியாகி பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்த ஜிகர்தண்டா திரைப்படத்தில் அட்டகாசமாக நடித்த பாபி சிம்ஹா சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்றார். மேலும் சிறந்த படத்தொகுப்பாளராக விவேக் ஹர்ஷனுக்கும் தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், குரு சோமசுந்தரம், லட்சுமி மேனன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த ஜிகர்தண்டா படத்தில் கௌரவத் தோற்றத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருந்தார். சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்களும் ஹிட் அடித்தன. தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஜிகர்தண்டா ரீமேக் செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி ஜிகர்தண்டா திரைப்படம் வெளியாகி 8 வருங்கள் கடந்ததை நினைவூட்டும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஜிகர்தண்டா 2 திரைப்படத்தின் அறிவிப்பையும் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

அதன் தொடர்ச்சியாக இன்று விநாயகர் சதுர்த்தி தினத்தன்று விநாயகர் சிலை அருகில் ஜிகர்தண்டா 2 திரைப்படத்தின் ஸ்கிரிப்டை வைத்து பூஜை செய்யும் புகைப்படத்தை பகிர்ந்து ஜிகர்தண்டா படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார். ஜிகர்தண்டா 2 ஸ்கிரிப்ட் புத்தகத்தில் "வேறு சில குற்றங்களும்… ஒரு கலையும்" என குறிப்பிட்டு கார்த்திக் சுப்புராஜ் பதிவிட்டுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜிகர்தண்டா 2 குறித்து கார்த்திக் சுப்புராஜின் பதிவு இதோ…
 

Happy Vinayagar Chathurthi 🪔🙏🏼

Pre Production from today... 😊#JigarThanda2 #ஜிகர்தண்டா2

வேறு சில குற்றங்களும்... ஒரு கலையும்..

Another Few Crimes & an Art... pic.twitter.com/XRAJyp5SeN

— karthik subbaraj (@karthiksubbaraj) August 31, 2022