துணை இயக்குனராக சில படங்களில் பணியாற்றி, அதன் பின் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குனராக கால் பதித்தவர் மிஷ்கின். முதல் படத்திலேயே ரசிகர்களின் அபிமானத்தை பெற்ற மிஷ்கின், அதன் பின் அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன் போன்ற சிறப்பான படங்களை இயக்கியிருந்தார். சிறந்த இயக்குனர் அல்லாது சீரான நடிகரும் கூட. சவரகத்தி, சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். 

தற்போது பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். பிசாசு 2 படத்தின் டைட்டில் லுக் போஸ்டரையும் சமீபத்தில் வெளியிட்டார். பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மிஷ்கின் இயக்கத்தில் நாகா, பிரயாகா மார்ட்டின், ராதாரவி உள்ளிட்டோர் நடித்த பிசாசு படம் கடந்த 2014ம் ஆண்டு வெளியாகி ஹிட்டானது அனைவரும் அறிந்ததே. 

ஹாரர் ஜானர் என்பதாலோ பிசாசு 2 படம் குறித்த அறிவிப்பு நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகி திகில் பட விரும்பிகளின் ஆவலை தூண்டியது. மிஷ்கினின் பிறந்தநாளையொட்டி நள்ளிரவில் பட அறிவிப்பை வெளியிட்டு அசத்தினர் படக்குழுவினர். ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் டி. முருகானந்தம் தயாரிக்கும் இந்த படத்தில் ராஜ்குமார் பிச்சுமணி படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார். கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு 2020 நவம்பர் மாதம் தொடங்கவுள்ளது. படத்தினை பற்றிய மற்ற தகவல் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சமீபத்தில் பிசாசு 2 படத்தின் ப்ரீ-ப்ரோடக்ஷன் பணியை துவங்கியுள்ளார் இயக்குனர் மிஷ்கின். ஸ்கிரிப்ட் பணிகளில் கவனம் செலுத்தி வரும் மிஷ்கின், இரவு நேரத்தில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள், புகைப்படத்திலும் டார்க் ஷாட்ஸா என்று கமெண்ட் செய்து வருகின்றனர். பொதுவாகவே மிஷ்கின் படங்களில் இருள் நிறைந்த காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இதைத்தான் அவரது ரசிகர்கள் மிஷ்கின் டச் என பாராட்டி வருகின்றனர். 

இந்நிலையில் பிசாசு 2 படத்தின் இசை பணிகள் துவங்கிவிட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் மிஷ்கின். இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா உடன் கம்போசிங்கில் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இதனால் படத்தின் பாடல்களுக்காக ஆவலில் உள்ளனர் இசை விரும்பிகள். 

மிஷ்கின் விஷாலை வைத்து துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வந்தார். ஆனால் பண விவகாரம் தொடர்பாக விஷால் மற்றும் மிஷ்கின் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து மிஷ்கின் துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து விலகினார்.

முன்னதாக மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதிராவ் ஹைதரி, நித்யா மேனன், ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்டோர் நடித்த சைக்கோ படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிசாசு 2 படத்தையும் ரசிகர்கள் விரும்பும் வகையில் மிஷ்கின் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.