தமிழ் சினிமாவின் மிக முக்கிய கதாநாயகர்களில் ஒருவராகவும் சிறந்த நடிகராகவும் விளங்கும் நடிகர் கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளிவந்த சுல்தான் திரைப்படம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்ப சூப்பர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து நடிகர் கார்த்தியின் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவர உள்ள திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக இந்திய திரையுலகில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பிரம்மாண்டமாக எழுத்தாளர் கல்கியின் அற்புதப் படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படைப்பாக உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் மிக முக்கிய கதாபாத்திரமான வல்லவரையன் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ளார். 

இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக இயக்குனர் P.S.மித்ரன் இயக்கத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் சர்தார் திரைப்படத்தில் நடிகர் கார்த்தி நடித்து வருகிறார்.

இதனிடையே கார்த்தியின் சூப்பர் ஹிட் திரைப்படமான கொம்பன் படத்தின் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் திரைப்படம் விருமன். நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் விருமன் திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

மேலும் அபர்ணா பாலமுரளி, பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரண் மற்றும் மனோஜ் பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் விருமன் திரைப்படத்திற்கு செல்வகுமார்.S.K. ஒளிப்பதிவு செய்ய யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட விருமன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்நிலையில் விருமன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் (நாளை) ஜனவரி 14 பொங்கல் தினத்தன்று (10.00am) ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விருமன் திரைப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.